இளம்பெண் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த முன்னாள் காதலன் கைது திருமணத்திற்கு வற்புறுத்தியதால் தீர்த்து கட்டினார்
ஹாவேரியில் இளம்பெண் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த முன்னாள் காதலன் கைது செய்யப்பட்டுள்ளார். திருமணம் செய்யும்படி வற்புறுத்தியதால் தீர்த்து கட்டியது அம்பலமாகி உள்ளது.
பெங்களூரு,
ஹாவேரி மவட்டம் கவுதி கல்யாணபுரா கிராமத்தை சேர்ந்தவர் ஷில்பா (வயது 21). இவருக்கும், ராணி பென்னூரை சேர்ந்த ஒரு வாலிபருக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பாக தான் திருமணம் நடந்திருந்தது. திருமணத்திற்கு பின்பு ராணி பென்னூரில் தனது கணவருடன் ஷில்பா வசித்து வந்தார். கடந்த 21-ந் தேதி கவுதி கல்யாணபுரா கிராமத்தில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு ஷில்பா வந்திருந்தார்.
மறுநாள் (22-ந் தேதி) ஹர்சகி கிராமத்தில் உள்ள வனப்பகுதியையொட்டி இருக்கும் பாழடைந்த வீட்டில் தலை நசுங்கி நிலையில் ஷில்பா கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து ஹாவேரி புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடிவந்தனர்.
இந்த நிலையில், ஷில்பாவை கொலை செய்ததாக, அவரது முன்னாள் காதலனான ஹரிபசவா என்பவரை ஹாவேரி புறநகர் போலீசார் கைது செய்துள்ளனர். விசாரணையில், ஷில்பாவுக்கு திருமணமாகும் முன்பு வரை ஹரிபசவாவை உயிருக்கு உயிராக காதலித்து வந்துள்ளார். ஆனால் 3 மாதத்திற்கு முன்பு வேறு வாலிபருடன் அவருக்கு திருமணம் நடந்துள்ளது. கடந்த 21-ந் தேதி பெற்றோர் வீட்டுக்கு வந்த ஷில்பா காதலன் ஹரிபசவா சந்தித்து பேசியுள்ளார்.
அப்போது தனது கணவருடன் வாழ பிடிக்கவில்லை, அதனால் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி ஹரிபசவாவை ஷில்பா வற்புறுத்தி உள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில் ஷில்பாவின் தலையில் கல்லைப்போட்டு ஹரிபசவா கொலை செய்துவிட்டு தலைமறைவாக இருந்தது தெரியவந்துள்ளது. கைதான ஹரிபசவாவிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.