திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமி கிரிவலத்துக்கு தடை
திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமி கிரிவலத்துக்கு தடைவிதிக்கப்பட்டது. இதனால் பக்தர்கள் இன்றி கிரிவலப்பாதை வெறிச்சோடி காணப்பட்டது.;
திருவண்ணாமலை
கட்டுப்பாடுகள்
திருவண்ணாமலையில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி தினத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் 14 கிலோ மீட்டர் தூரம் கிரிவலம் செல்வார்கள். அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெறும் கார்த்திகை தீபத் திருவிழாவின் போது சுமார் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள். அதற்கு அடுத்தபடியாக சித்ரா பவுர்ணமி தினத்தில் அதிகப்படியான பக்தர்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வார்கள்.
கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் இறுதியில் இருந்து பல்வேறு கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ளது. ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதில் இருந்து திருவண்ணாமலை கிரிவலம் செல்லவும் மாவட்ட நிர்வாகத்தால் தொடர்ந்து தடை விதிக்கப்பட்டு வருகிறது.
கிரிவலத்துக்கு தடை
கடந்த ஆண்டு மே மாதத்தில் வந்த சித்ரா பவுர்ணமியின் போதும் கிரிவலத்துக்கு தடை விதிக்கப்பட்டது. ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் செய்யப்பட்டதால் இந்த ஆண்டு சித்ரா பவுர்ணமிக்கு அனுமதி அளிக்கப்படும் என்று பக்தர்கள் பெரும் எதிப்பார்ப்பில் இருந்தனர்.
ஆனால் தற்போது கொரோனா தொற்றின் 2-ம் அலை மிகவும் தீவிரமாக உள்ளதால் சித்ரா பவுர்ணமிக்கு பக்தர்கள் கிரிவலம் செல்ல அனுமதி அளித்தால் தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பிற மாநிலத்தை சேர்ந்த பக்தர்களும் வருவார்கள். லட்சகணக்கானோர் திருவண்ணாமலையில் கூடினால் மேலும் கொரோனா தொற்றின் பாதிப்பு அதிகரிக்கும் என்பதால் சித்ரா பவுர்ணமிக்கு பக்தர்கள் கிரிவலம் செல்ல மாவட்ட நிர்வாகம் தடைவிதித்துள்ளது.
வெறிச்சோடிய கிரிவலப்பாதை
சித்ரா பவுர்ணமி நேற்று மதியம் 12.18 மணிக்கு தொடங்கி இன்று (செவ்வாய்க்கிழமை) காைல 9.58 மணிக்கு நிறைவடைகிறது. இதையொட்டி கிரிவலப்பாதையில் செங்கம் சாலை, அபய மண்டபம் எதிரில் என முக்கிய சந்திப்பு பகுதிகளில் போலீசார் தடுப்புகள் அமைத்து பக்தர்கள் யாரும் கிரிவலம் செல்ல விடமால் தடுத்து திருப்பி அனுப்பினர். இதனால் கிரிவலப்பாதை வெறிச்சோடி காணப்பட்டது. சிலர் குறுக்கு வழியாக கிரிவலப்பாதைக்கு வந்தனர். அவர்களையும் போலீசார் எச்சரித்து அனுப்பினர்.