நாமக்கல் மாவட்டத்தில் அரசு பள்ளி ஆசிரியை உள்பட 208 பேருக்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 14,588 ஆக உயர்வு
நாமக்கல் மாவட்டத்தில் அரசு பள்ளி ஆசிரியை உள்பட 208 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 14,5888 ஆக உயர்ந்துள்ளது.
நாமக்கல்,
தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பின்படி நேற்று முன்தினம் வரை நாமக்கல் மாவட்டத்தில் 14,379 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இதனிடையே பிற மாவட்டத்தில் சிகிச்சை பெற்று வந்த ஒருவரின் பெயர் நாமக்கல் மாவட்ட பட்டியலுக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 14,380 ஆக ஆனது.
இந்தநிலையில் நேற்று அரசு பள்ளி ஆசிரியை, ஆயுதப்படை போலீஸ்காரர், அரசு பஸ் டிரைவர் உள்பட 208 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதியானது. இதனால் நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 14,588 ஆக உயர்ந்தது. இதில் நாமக்கல், திருச்செங்கோடு, ராசிபுரம் மற்றும் குமாரபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டது தெரியவந்து உள்ளது. நேற்று ஒரே நாளில் இந்த மாவட்டத்தில் 127 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பினார்.
1,501 பேருக்கு சிகிச்சை
இதனிடையே இதுவரை கொரோனாவுக்கு 114 பேர் பலியாகி இருந்த நிலையில், 12,973 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். மேலும் 1,501 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.