கொரோனாவுக்கு மூதாட்டி பலி
அந்தியூர் அருகே கொரோனாவுக்கு மூதாட்டி பலியானார்.
அந்தியூர்
அந்தியூர் அருகே கொரோனாவுக்கு மூதாட்டி பலியானார்.
மூதாட்டி பலி
அந்தியூர் அருகே உள்ள கெட்டிசமுத்திரம் ஊராட்சி பகுதியில் கடந்த 23-ந் தேதி அன்று நடமாடும் மருத்துவ குழுவினர் அப்பகுதியில் முகாம் அமைத்து 30 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்தனர். இதில் நேற்று முன்தினம் புதுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த 60 வயதுடைய மூதாட்டிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து அவர் பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி மூதாட்டி நேற்று காலை பரிதாபமாக இறந்தார்.
தடுப்பு நடவடிக்கை
இதையடுத்து அப்பகுதியில் கொரோனா தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டது. எண்ணமங்கலம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அதிகாரி டாக்டர் சதீஷ்குமார் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள், கிராம செவிலியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் மூலம் அப்பகுதி அனைத்தும் கிருமிநாசினி அடித்தும் பிளீச்சிங் பவுடர் போடப்பட்டு வருகின்றன.
தொடர்ந்து மூதாட்டியுடன் தொடர்புடையவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தடை செய்யப்பட்டது
அந்தியூர் தெப்பக்குளம் வீதி பகுதியில் 3 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து கொரோனா பரவலை தடுக்க அப்பகுதியில் பொதுமக்கள் நடமாட்டத்தை தடை செய்வதற்காக தடுப்புகள் அமைக்கப்பட்டது. மேலும் யாரும் உள்ளே பிரவேசிக்கக்கூடாது என அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டது.
இதுதவிர அப்பகுதியில் கிருமிநாசினி தெளித்தும், பிளீச்சிங் பவுடர் போட்டும் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டன. இந்த பணியில் கிராம நிர்வாக அதிகாரி முருகானந்தம் மற்றும் சின்னத்தம்பிபாளையம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அதிகாரி டாக்டர் சக்தி கிருஷ்ணன், அந்தியூர் பேரூராட்சி செயல் அதிகாரி ஹரி ராமமூர்த்தி ஆகியோர் ஈடுபட்டனர்.