ஊரடங்கிலும் உண்மை பாசம்: செல்லமாக வளர்த்த பூனையின் உடலை நாய்களுடன் சென்று அடக்கம் செய்த பெண்
ஊரடங்கிலும் உண்மை பாசமாக செல்லமாக வளர்த்த பூனையின் உடலை ஒரு பெண் நாய்களுடன் சென்று அடக்கம் செய்தார்.;
கவுந்தப்பாடி
ஊரடங்கிலும் உண்மை பாசமாக செல்லமாக வளர்த்த பூனையின் உடலை ஒரு பெண் நாய்களுடன் சென்று அடக்கம் செய்தார்.
பூனைகளும்-நாய்களும்
கவுந்தப்பாடியை சேர்ந்தவர் வசந்தி (வயது 45). இவர் தள்ளுவண்டியில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். செல்லப்பிராணிகள் வளர்ப்பில் ஆர்வம் கொண்ட இவர் ராஜேஷ், விக்னேஷ் என்று பெயரிட்டு 2 பூனைகளையும், கருவாச்சி, வெள்ளச்சி என்று பெயரிட்டு 2 நாய்களையும் வளர்த்து வந்தார்.
இந்த பூனைகளும், நாய்களும் வசந்தி எங்கே சென்றாலும், அங்கே செல்லும் அதனால் காய்கறிகள் விற்க செல்லும்போது கூட தள்ளுவண்டியிலேயே அவைகளையும் ஏற்றிக்கொண்டு செல்வார்.
அதேபோல் வீட்டில் வசந்தி ஓய்வு எடு்க்கும்போது குழந்தைகள் போல் அவர் அருகிலேயே படுத்து தூங்கும். உணவு உண்ணும்போது, தன்னுடைய சாப்பாட்டையே அவைகளுக்கும் ஊட்டுவார்.
கண்ணீர் விட்டார்...
இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு விக்னேஷ் என்ற பூனை மோட்டார்சைக்கிளில் அடிபட்டு படுகாயம் அடைந்தது. உடனே பூனைக்கு மருந்து, மாத்திரைகள் வாங்கி புகட்டினார். எனினும் நேற்று காலை பூனை இறந்தது. இதனால் வசந்தி கண்ணீர் விட்டு கதறி அழுதார்.
பின்னர் பூனையின் உடலை ஒரு துணியில் சுற்றி கவுந்தப்பாடி ஓடை பகுதிக்கு கொண்டு சென்றார். அவருடனேயே 2 நாய்களும் சோகமாக சென்றன. பிறகு குழிதோண்டி பூனையை புதைத்துவிட்டு, அஞ்சலி செலுத்திவிட்டு வந்தார்.
ஊரே கொரோனா முழு ஊரடங்கால் வீட்டுக்குள் முடங்கி கிடக்க வசந்தி தன்னுடைய நாய்களுடன் செல்லமாக வளர்த்த பூனையை அடக்க செய்ய கொண்டு சென்றது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.