முழு ஊரடங்கையொட்டி ஈரோட்டில் சாலைகள் வெறிச்சோடின; வீடுகளிலேயே முடங்கிய மக்கள்
ஈரோட்டில் முழு ஊரடங்கு காரணமாக முக்கிய சாலைகள் வெறிச்சோடின. பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கினார்கள்.
ஈரோடு
ஈரோட்டில் முழு ஊரடங்கு காரணமாக முக்கிய சாலைகள் வெறிச்சோடின. பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கினார்கள்.
முழு ஊரடங்கு
கொரோனா தொற்றின் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. தமிழகத்தில் நாளுக்குநாள் பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் பிறப்பிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று முழு ஊரடங்கு மாநிலம் முழுவதும் அமல்படுத்தப்பட்டது.
ஈரோடு மாவட்டம் முழுவதும் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வரக்கூடாது என்று உத்தரவிடப்பட்டதால், மக்கள் வெளியே செல்லாமல் வீடுகளிலேயே முடங்கினார்கள். அவர்கள் தேவையான பொருட்களை நேற்று முன்தினமே வாங்கி வைத்திருந்தனர். பால், மருந்து பொருட்கள் மட்டும் விற்பனை செய்ய அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இதனால் பால் கடைகளும், மருந்து கடைகளும் திறக்கப்பட்டு இருந்தன.
கடைகள் அடைப்பு
ஓட்டல்களில் குறிப்பிட்ட நேரம் உணவு பார்சல் வினியோகம் செய்ய அனுமதிக்கப்பட்டது. அதன்படி ஈரோட்டில் ஒருசில கடைகள் மட்டுமே திறக்கப்பட்டு இருந்தன. ஆனால் பொதுமக்கள் வெளியில் செல்ல அனுமதி கிடையாது என்பதால், அந்த கடைகளும் வெறிச்சோடி காணப்பட்டன. அதே சமயம் வீடுகளுக்கே சென்று உணவு வினியோகம் செய்யும் மின் வணிக சேவைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டதால், அந்த நிறுவன ஊழியர்கள் கடைகளில் உணவு பார்சல் வாங்கி வினியோகம் செய்தனர்.
ஆனால் மக்கள் நடமாட்டம் இல்லாததால், வியாபாரம் குறைவாக காணப்படும் என்று பெரும்பாலான ஓட்டல்கள் அடைக்கப்பட்டு இருந்தன. இதேபோல் டீக்கடைகள், டாஸ்மாக் கடைகள், ஜவுளிக்கடைகள், நகைக்கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் மூடப்பட்டன.
வெறிச்சோடிய சாலைகள்
முழு ஊரடங்கில் பஸ்கள், ஆட்டோக்கள், வாடகை கார்கள், வேன்கள் என எந்தவொரு வாகனங்களும் இயக்கப்படவில்லை.
அவசர உதவிக்கு மட்டுமே ஒருசில கார்களும், ஆட்டோக்களும் இயக்கப்பட்டன. இதனால் ஈரோட்டில் எப்போதும் பரபரப்பாக காணப்படும் அரசு ஆஸ்பத்திரி ரவுண்டானா, மேட்டூர் ரோடு, பெருந்துறை ரோடு, ஈ.வி.என். ரோடு, பன்னீர்செல்வம் பூங்கா, காந்திஜிரோடு, சத்திரோடு, பவானிரோடு, கரூர்ரோடு, சென்னிமலைரோடு ஆகிய முக்கிய சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.
ஈரோடு பஸ் நிலையத்தில் எந்தவொரு பஸ்களும் இல்லாமல் அமைதி நிலவியது.
வார விடுமுறை மற்றும் அரசு விடுமுறை தினங்களில் கடை வீதிகளில் கூட்டம் அதிகமாக காணப்படும். குறிப்பாக ஜவுளிக்கடைகள், நகைக்கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுவதை காணலாம். ஆனால் ஊரடங்கு காரணமாக நேற்று ஜவுளி கடைகள், நகைக்கடைகள், கனிமார்க்கெட் ஜவுளிச்சந்தை அடைக்கப்பட்டதால் ஈரோடு ஆர்.கே.வி.ரோடு, ஈஸ்வரன் கோவில் வீதி, திருவேங்கடசாமிவீதி, மணிக்கூண்டு, பன்னீர்செல்வம் பூங்கா ஆகிய பகுதிகள் வெறிச்சோடியே காணப்பட்டன.