சங்கரன்கோவில் அருகே வேன் கவிழ்ந்து வாலிபர் பலி
சங்கரன்கோவில் அருகே வேன் கவிழ்ந்த விபத்தில் வாலிபர் பலியானார்.
சங்கரன்கோவில், ஏப்:
சங்கரன்கோவில் அருகே வேன் கவிழ்ந்து வாலிபர் பலியானார். 14 பேர் படுகாயம் அடைந்தனர்.
காதணி விழா
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள கண்டிகைபேரி கிராமத்தை சேர்ந்தவர் கனிராஜ் மகள் கற்பகவல்லி. இவரை விருதுநகர் மாவட்டம் தெற்கு வெங்காநல்லூர் கிராமத்தில் திருமணம் செய்து கொடுத்து உள்ளனர்.
கரிவலம்வந்தநல்லூர் அருகே மலையடிப்பட்டி கிராமத்தில் உள்ள கோவிலில் கற்பகவல்லி மகள் மித்ராஸ்ரீக்கு (1) காதணி விழா நடந்ததாக கூறப்படுகிறது.
இதற்காக கண்டிகைபேரி கிராமத்தில் இருந்து உறவினர்களை கனிராஜ் வேனில் மலையடிப்பட்டிக்கு அழைத்துச் சென்றார். பின்னர் விழாவை முடித்துவிட்டு அனைவரும் கண்டிகைபேரிக்கு வேனில் திரும்பி வந்து கொண்டிருந்தனர். வேனை அதே ஊரைச் சேர்ந்த சின்னசாமி மகன் ஜோதி (வயது 35) என்பவர் ஓட்டினார்.
வாலிபர் பலி
சங்கரன்கோவில் அருகில் உள்ள பெரும்புதூரில் வேகத்தடை மீது வேன் ஏறியதாக கூறப்படுகிறது. இதில் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையின் அருகில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வேனில் இருந்த முருகன் மகன் செந்தூர்பாண்டி (25) என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதை பார்த்த அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் வேனில் இருந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
14 பேர் காயம்
இந்த சம்பவத்தில் வேனை ஓட்டி வந்த ஜோதி, கண்டிகைபேரியை சேர்ந்த மாரிதுரை (27), இன்பரசி (30), மீனாட்சி (55), மனோரஞ்சனி (17), கற்பகக்கனி (22), சின்னத்துரை (30), வீரபுத்திரன் (49), முனியசாமி (20), காசினி (8 மாத குழந்தை), கலைச்செல்வி (20), பாட்டத்தூர் கிராமத்தை சேர்ந்த பாண்டியராஜ் (35), சங்கரன்கோவிலை சேர்ந்த வேல்மயில் (26), அவரது மகள் நிஷா (8 மாத குழந்தை) ஆகிய 14 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
அங்கு இருந்து ஜோதி, வேல்மயில், நிஷா, இன்பரசி, பாண்டியராஜ், மீனாட்சி, கற்பகக்கனி, வீரபுத்திரன், முனியசாமி ஆகியோர் மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த சம்பவம் குறித்து கரிவலம்வந்தநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.