கொரோனா பாதிப்பு 600-ஐ தாண்டியது
மதுரையில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 600-ஐ தாண்டியது;
மதுரை
மதுரையில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 600-ஐ தாண்டியது. புதிதாக 3 பெண்கள் உள்பட 5 பேர் உயிரிழந்தனர்.
கொரோனா வைரஸ்
மதுரையில் இந்த மாத தொடக்கத்தில் இருந்தே கொரோனா பாதிப்பு உயர்ந்து வருகிறது. அதில் புதிய உச்சமாக நேற்று ஒரே நாளில் 603 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. நேற்று 6 ஆயிரத்து 500 பேருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் தான் 603 பேருக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 420 பேர் நகர் பகுதியை சேர்ந்தவர்கள். மீதமுள்ளவர்கள் புறநகர் பகுதியை சேர்ந்தவர்கள். மதுரையில் இதுவரை நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 27 ஆயிரத்து 936 ஆக உயர்ந்துள்ளது.
இதுபோல், நேற்று 304 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இவர்களில் 280 பேர் நகர் பகுதியை சேர்ந்தவர்கள். இதன் மூலம், இதுவரை 23 ஆயித்து 720 பேர் குணம் அடைந்து வீட்டிற்கு சென்றிருக்கிறார்கள். சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது. தற்போது சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 3,720 ஆக உயர்ந்துள்ளது.
5 பேர் உயிரிழப்பு
மதுரையில் கடந்த சில தினங்களாக உயிரிழப்புகளும் அதிகரித்த வண்ணம் உள்ளன. அந்த வகையில் நேற்றும் மதுரையில் புதிதாக 5 பேர் உயிரிழந்தனர். அவர்கள் அனைவரும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றவர்கள்.
அதன்படி மதுரையை சேர்ந்த 48, 51 வயது பெண், 66 மூதாட்டி, 54 வயது ஆண், 78 வயது முதியவர் என 5 பேர் உயிரிழந்தனர். இவர்களுக்கு கொரோனா நோய் பாதிப்புடன் வேறு சில நோய் பாதிப்புகள் இருந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து டாக்டர்கள் கூறுகையில், கொரோனாவின் 2-வது அலை கடுமையாக இருக்கிறது. அதிலும், உயிரிழப்புகள் தான் அதிகம் இருக்கின்றன. கொரோனா முதல் அலையில் இருந்ததைவிட, தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிக மூச்சு திணறல் ஏற்படுகிறது. அதன் விளைவாகவே உயிரிழப்புகளும் நடக்கிறது. எனவே மக்கள் அனைவரும் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். பொது இடங்களுக்கு செல்லும்போது சமுக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றனர்.