கோவில் நந்தவனத்தில் தயாரான மாதிரி வைகை ஆறு
கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி நாளை நடக்கிறது இதற்காக கோவில் நந்தவன பகுதியில் மாதிரி வைகை ஆறு அமைக்கப்பட்டுள்ளது
அழகர்கோவில்
கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி நாளை நடக்கிறது. இதற்காக கோவில் நந்தவன பகுதியில் மாதிரி வைகை ஆறு அமைக்கப்பட்டுள்ளது.
கள்ளழகர் கோவில்
உலகப் பிரசித்தி பெற்ற அழகர்கோவில் கள்ளழகர் கோவில் சித்திரை பெருந்திருவிழா, இந்த வருடம் கொரோனா வைரஸ் 2-வது பரவல் காரணமாக திருவிழா நிகழ்ச்சிகள் அனைத்தும் அரசு வழிகாட்டுதல்படி கோவில் வளாகத்திலேயே நடத்த அரசு முடிவுப்படி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி இந்த வருடம் கடந்த 23-ந் தேதி மாலையில் கோவில் வளாகத்தில் திருவிழா தொடங்கியது. அன்று கள்ளழகர் பெருமாள் பல்லக்கில் எழுந்தருளி புறப்பாடாகி அங்குள்ள திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளினார்.
இதைதொடர்ந்து 24, 25-ந் தேதிகளிலும் கோவில் வளாகத்திலேயே ஆகம விதிப்படி மேளதாளம் முழங்க தீவட்டி பரிவாரங்களுடன் சுவாமி புறப்பாடு நடந்தது. இன்று(திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு கோவில் வளாகத்தில் எதிர் சேவை, கள்ளர் திருக்கோல நிகழ்ச்சியும் நடைபெறும்.
ஆற்றில் இறங்கும் வைபவம்
நாளை (செவ்வாய்க்கிழமை) கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் நடைபெற உள்ளது. இதற்காக கோவில் ஆடி வீதி நந்தவனத்தில் மாதிரி வைகை ஆறு அமைக்கப்பட்டுள்ளது. இதில் தான் நாளை காலை 8 மணிக்கு குதிரை வாகனத்தில் எழுந்தருளும் சுவாமிக்கு ஆண்டாள் மாலை சாற்றுதல், பின்னர் 8.30 மணிக்கு ஆடி வீதியில் சுவாமி புறப்பாடும் நடைபெறும். 28-ந் தேதி காலை 10.30 மணிக்கு சேஷ வாகனத்தில் புறப்பாடும், 29-ந் தேதி காலை 10 மணிக்கு கருட சேவை, மண்டூக மகரிஷிசிக்கு மோட்சம் அளித்தல், 30-ந் தேதி காலை 10 மணிக்கு பூப்பல்லக்கு விழாவும், மே 1-ந் தேதி காலை 10 மணிக்கு அர்த்தமண்டப சேவையும், 2-ந் தேதி காலை 10 மணிக்கு உற்சவ சாந்தி, திருமஞ்சனமும் நடைபெறும். இத்துடன் சித்திரை திருவிழா நிறைவு பெறுகிறது.
அனைத்து நிகழ்ச்சிகளிலும் கோவில் பட்டாச்சாரியார்கள் மற்றும் கோவில் பணியாளர்கள் பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றி கலந்து கொள்கிறார்கள். தற்போதுள்ள நிலவரப்படி பக்தர்கள் யாரும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படமாட்டார்கள். இதற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் வெங்கடாசலம், நிர்வாக அதிகாரி அனிதா மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.