திருச்சி மாநகரம் ஸ்தம்பித்தது;வீட்டில் முடங்கிய பொதுமக்கள்

முழு ஊரடங்கால் திருச்சி மாநகரம் ஸ்தம்பித்தது. வாகன போக்குவரத்து இல்லாததால் பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கினர்.

Update: 2021-04-25 20:16 GMT
திருச்சி 
முழு ஊரடங்கால் திருச்சி மாநகரம் ஸ்தம்பித்தது. வாகன போக்குவரத்து இல்லாததால் பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கினர்.

முழு ஊரடங்கு

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக கடந்த 20-ந் தேதி முதல் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை இரவுநேர ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. மேலும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. 

அதன்படி ஞாயிற்றுக்கிழமையான நேற்று திருச்சி மாநகரில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு இருந்தன. திருச்சி மாநகரின் முக்கிய சாலையான என்.எஸ்.பி.ரோடு, பெரியகடைவீதி, சின்னக்கடைவீதி, சிங்காரத்தோப்பு, சத்திரம் பஸ்நிலையம், மத்திய பஸ்நிலையம், உறையூர், தில்லைநகர், சாஸ்திரிரோடு, ஜங்ஷன், கே.கே.நகர், பொன்மலைப்பட்டி, அரியமங்கலம், ஸ்ரீரங்கம்  என அனைத்து பகுதிகளிலும் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. பெட்ரோல் விற்பனை நிலையங்கள், மருத்துவமனைகள், மருந்துகடைகள், பாலகங்கள் மட்டுமே திறந்து இருந்தன.

வீட்டில் முடங்கிய பொதுமக்கள்

ஒரு சில ஓட்டல்களில் பார்சல்கள் மட்டுமே வழங்கப்பட்டது. அத்தியாவசிய பணிக்கு செல்லும் வாகனங்கள் தவிர மற்ற  வாகன போக்குவரத்து முற்றிலும் தடைசெய்யப்பட்டிருந்தது. 7 மாதங்களுக்கு பிறகு மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் மக்கள் வீட்டிலேயே முடங்கினர். இதனால் சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டன. நேற்று முகூர்த்த தினம் என்பதால் ஏற்கனவே திட்டமிடப்பட்டு இருந்த திருமணங்கள் அரசு வழிகாட்டு நெறிமுறைகளுடன் அதிகஅளவில் கூட்டமின்றி எளிமையாக நடந்தது.

அபராதம்

மாநகரில் 22 இடங்களில் தற்காலிக சோதனைச்சாவடிகள் அமைத்தும், ஆங்காங்கே ெஹலிகேமரா மூலமும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். தேவையின்றி வாகனங்களில் வெளியே சுற்றி திரிந்தவர்களிடம் விசாரணை நடத்தினார்கள். மருத்துவமனைகள், திருமணங்கள், மருந்துக்கடைகளுக்கு செல்பவர்களிடம் உரிய ஆதாரங்களை வாங்கி பார்த்தபிறகே அனுப்பி வைக்கப்பட்டனர். எந்தவொரு ஆவணமும் இன்றி சுற்றி திரிந்தவர்களுக்கு அபராதம் விதித்தனர். ஒரு சில இடங்களில் வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டது.

கிரிக்கெட் விளையாடிய சிறுவர்கள்

அதேநேரம் சாலைகள் வெறிச்சோடி கிடந்ததால் தென்னூர் உள்ளிட்ட சில பகுதிகளில் சிறுவர்கள் சாலையில் கிரிக்கெட் விளையாடினார்கள். சிறப்பு ரெயில்கள் பல இயங்கியதால் ரெயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் ஓரளவு இருந்தது. பஸ்கள் ஓடாததால் பணிமனையில் நிறுத்திவைக்கப்பட்டு இருந்தன.

மேலும் செய்திகள்