கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மேலும் 5 மையங்கள்- கலெக்டர் விஷ்ணு தகவல்

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மேலும் 5 மையங்கள் தயாராகிறது என கலெக்டர் விஷ்ணு தெரிவித்தார்.;

Update: 2021-04-25 20:09 GMT
நெல்லை, ஏப்:
நெல்லை மாவட்டத்தில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மேலும் 5 மையங்கள் தயாராகிறது என்று கலெக்டர் விஷ்ணு தெரிவித்தார். 

புதிய சிகிச்சை மையங்கள்

கொரோனா 2-வது கட்ட பரவலையொட்டி நெல்லை மாநகராட்சி பகுதிகளில் காய்ச்சல் கண்டறியும் சிறப்பு முகாம்கள் மற்றும் கொரோனா பராமரிப்பு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. பாளையங்கோட்டை மகாராஜநகர் மற்றும் பஸ்நிலையம் அருகில் உள்ள மாநகராட்சி திருமண மண்டபத்தில் தலா 100 படுக்கை வசதிகளுடன் கூடிய கொரோனா பராமரிப்பு மையம் தயாராகி வருகிறது. இந்த பணிகளை நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும் அங்கு வரும் நோயாளிகளுக்கு தேவையான மருந்துகள், ஆக்சிஜன் இருப்பு நிலை குறித்தும், படுக்கை வசதிகள் குறித்தும் டாக்டர்களிடம் ஆலோசனை நடத்தினார்.
தொடர்ந்து நெல்லை சந்திப்பு மீனாட்சிபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த காய்ச்சல் கண்டறியும் சிறப்பு முகாமையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

670 படுக்கை வசதி

பின்னர் கலெக்டர் விஷ்ணு நிருபர்களிடம் கூறியதாவது:- 
பாளையங்கோட்டை மகாராஜநகர் மாநகராட்சி திருமண மண்டபத்தில் 100 படுக்கை வசதிகளுடன் கூடிய கொரோனா பராமரிப்பு மையம், பாளையங்கோட்டை பஸ் நிலையம் அருகில் உள்ள மாநகராட்சி அருண்ஸ் திருமண மண்டபத்தில் 100 படுக்கை வசதிகளுடன் கூடிய கொரோனா பராமரிப்பு மையம் அமைக்கப்படுகிறது. சேரன்மாதேவி ஸ்காட் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் 150 படுக்கை, தருவை பிரான்சிஸ் சேவியர் பாலிடெக்னிக் கல்லூரியில் 150 படுக்கை, முக்கூடல் பீடி தொழிலாளர் மருத்துவமனையில் 170 படுக்கை வசதிகளுடன் கூடிய கொரோனா பராமரிப்பு மையம் தயாராகி வருகிறது. இங்கு கொரோனா நோயாளிகள் எண்ணிக்கையை பொறுத்து புதிய சிகிச்சை மையங்களில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படும்.

காய்ச்சல் முகாம்

மேலும் நெல்லை மாநகராட்சி பகுதிகளில் 11 சிறப்பு காய்ச்சல் கண்டறியும் மருத்துவ முகாமும், புறநகர் பகுதியில் 42 சிறப்பு காய்ச்சல் கண்டறியும் மருத்துவ முகாமும் இன்று நடைபெறுகிறது. 
நெல்லை மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதால் நோய்த்தொற்றை தடுப்பதற்காக மாவட்ட நிர்வாகம் மூலம் பல்வேறு நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொரோனா வேகமாக பரவி வருவதால் பொதுமக்கள் அனைவரும் கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதனை அனைவரும் பின்பற்ற வேண்டும். கொரோனா நோய் பரவுவதை முற்றிலும் தடுப்பதற்காக பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின்போது நெல்லை மாநகர நல அலுவலர் சரோஜா, மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் நவாஸ் கான், மாநகராட்சி உதவி ஆணையாளர் பிரேம் ஆனந்த் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்