தஞ்சை மாவட்டத்தில் முழு ஊரடங்கு ஒரே நாளில் ரூ.8¼ கோடிக்கு மது விற்பனை
தஞ்சை மாவட்டத்தில் முழு ஊரடங்கையொட்டி நேற்று முன்தினம் ஒரே நாளில் மட்டும் ரூ.8¼ கோடிக்கு மது விற்பனை நடைபெற்றது.
தஞ்சாவூர்:-
தஞ்சை மாவட்டத்தில் முழு ஊரடங்கையொட்டி நேற்று முன்தினம் ஒரே நாளில் மட்டும் ரூ.8¼ கோடிக்கு மது விற்பனை நடைபெற்றது.
முழு ஊரடங்கு
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், தமிழக அரசு கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில், மாநிலம் முழுவதும் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிறது. அந்த வகையில், மாநிலம் முழுவதும் இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு நேர ஊரடங்கும் அமல்படுத்தியுள்ளது.
அதன்படி நேற்று முழு ஊரடங்கு என்பதால் தஞ்சை மாவட்டத்தில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. அதேபோல் டாஸ்மாக் கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. மதுப் பிரியர்கள் முதல்நாளே தங்களுக்கு தேவையான மதுபாட்டில்களை வாங்கிச் சென்று இருப்பு வைத்துக் கொண்டனர். இதனால் நேற்று முன்தினம் டாஸ்மாக் கடைகளில் வழக்கத்தைவிட மதுப் பிரியர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. விற்பனையும் படுஜோராக நடைபெற்றது.
வழக்கத்தைவிட அதிகம்
தஞ்சை மாவட்டத்தில் 161 டாஸ்மாக் கடைகள் உள்ளன. வழக்கமாக பண்டிகை நாட்களில் விற்பனை அதிகமாக இருக்கும். ஆனால் கடந்த சில மாதங்களாகவே ஒருநாள் டாஸ்மாக் கடை மூடப்படுகிறது என்றாலே அதற்கு முதல் நாள் மது விற்பனை பண்டிகை நாட்களை விட அதிக அளவில் நடைபெறுகிறது.
வழக்கமான நாட்களில் தஞ்சை மாவட்டத்தில் ரூ.4 கோடி முதல் ரூ.5 கோடிவரை மது விற்பனை நடைபெறும். நேற்று முழு ஊரடங்கு என்பதால் நேற்று முன்தினம் மட்டும் தஞ்சை மாவட்டத்தில் உள்ள 161 டாஸ்மாக் கடைகள் மூலம் ரூ.8 கோடியே 22 லட்சத்து 59 ஆயிரத்து 850 மதிப்பில் மது விற்பனை நடைபெற்றது.