முதியவர் கொலை வழக்கில் 2 பேர் கைது

சிவகாசியில் முதியவர் கொலை வழக்கில் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-04-25 19:22 GMT
சிவகாசி, 
சிவகாசியில் முதியவர் கொலை வழக்கில் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
சமையல் தொழில்
சிவகாசி பாரதிநகரை சேர்ந்த சேகர் (வயது 60). சமையல் தொழில் செய்து வந்த இவர் கடந்த 20-ந் தேதி சிவகாசி- சாத்தூர் ரோட்டில் உள்ள பிள்ளைக்குழி என்ற இடத்தில் ரத்த காயங்களுடன் பிணமாக கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த சிவகாசி டவுன் இன்ஸ்பெக்டர் வெங்கடாஜலபதி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றினர். கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர்.
தலைமறைவு 
 இதில் உரிய தகவல் கிடைக்காமல் போலீசார் திணறினர். இந்தநிலையில் இன்ஸ்பெக்டர் வெங்கடாஜலபதி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு சேகர் பணியாற்றி வந்த இடங்கள் மற்றும் அவரை தினமும் சந்திக்கும் நபர்கள் குறித்து விசாரித்தனர். 
இதில் அவருடன் பணியாற்றி வந்த நாரணாபுரத்தை சேர்ந்த விக்னேஷ்குமார் என்பவர் தலைமறைவாக இருந்தார். அவரை பற்றி விசாரித்தனர்.
சிக்கினார்
இந்தநிலையில் விக்னேஷ்குமார் விஸ்வநத்தம் சுடுகாடு பகுதியில் பதுங்கி இருப்பதாக டவுன் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 
அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். அங்கு விக்னேஷ்குமார் (29), அவரது உறவினர் தமிழ்செல்வன் (19) ஆகியோர் பதுங்கி இருந்தனர். 2 பேரையும் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் 2 பேரும் சேர்ந்து சமையல் தொழிலாளி சேகரை கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர்.
வாக்குமூலம்
பின்னர் சிவகாசி டவுன் போலீஸ் நிலையத்துக்கு அவர்கள் 2 பேரையும் அழைத்து வந்த போலீசார் அங்கு அவர்களிடம் கொலை சம்பவம் நடந்தது எப்படி? என்பது குறித்து விசாரித்தனர். இதில் அவர்கள் வாக்குமூலம் கொடுத்தது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது:-
விக்னேஷ்குமார் கடந்த ஆண்டு ஜூன் மாதம் சாத்தூரில் நடைபெற்ற ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்றுள்ளான். பின்னர் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்து சமையல் தொழிலாளி சேகருடன் சமையல் வேலைக்கு சென்றுள்ளான். பணி முடிந்த பின்னர் இவர்கள் வழக்கமாக மது குடிப்பது வழக்கம். அதே போல் சம்பவத்தன்று சேகர், விக்னேஷ்குமார், தமிழ்செல்வன் ஆகியோர் மது குடித்துள்ளனர். போதையில் சேகருக்கும், விக்னேஷ்குமாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் விக்னேஷ்குமாரும், தமிழ்செல்வனும் பீர் பாட்டிலால் அடித்தும், குத்தியும்  சேகரை கொலை செய்து விட்டு பிணத்தை அங்கேயே போட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இவ்வாறு அந்த போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.
பாராட்டு
சிவகாசி டவுன் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் கடந்த வாரம் அடுத்தடுத்து 2 கொலை சம்பவங்கள் நடை பெற்றது. 
இதில் சேகர் கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் சிக்காமல் இருந்த நிலையில் இன்ஸ்பெக்டர் வெங்கடா ஜலபதியின் விசாரணையில் 2 பேர் கைது செய்யப்பட்டனர். அதேபோல் வாலிபர் நவநீதகிருஷ்ணன் கொலை வழக்கில் ஈடுபட்டதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர். சிவகாசி டவுன் போலீசாரின் இந்த நடவடிக்கையை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெருமாள், சிவகாசி துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபாகரன் ஆகியோர் பாராட்டினர்.

மேலும் செய்திகள்