திருமணத்துக்கு வற்புறுத்திய இளம்பெண்ணை கொலை செய்த கள்ளக்காதலன் கைது
அருப்புக்கோட்டை அருகே செல்போன் மூலம் ஏற்பட்ட கள்ளக்காதலை தொடர்ந்து திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொலை செய்தவாலிபரை போலீசார் கைது செய்தனர்
விருதுநகர்,
அருப்புக்கோட்டை அருகே செல்போன் மூலம் ஏற்பட்ட கள்ளக்காதலை தொடர்ந்து திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொலை செய்தவாலிபரை போலீசார் கைது செய்தனர்
இளம்பெண்
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே உள்ள கூத்திப்பாறை கிராமத்தைச் சேர்ந்தவர் சத்ய பிரியா (வயது 22). இவருக்கும், மதுரை மாவட்டம் தும்மகுண்டு கிராமத்தை சேர்ந்த வசந்தபாண்டி என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
ஒரு குழந்தை பிறந்து உள்ள நிலையில் கடந்த ஆகஸ்டு மாதம் சத்யபிரியா கூத்திப்பாறையில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு வந்திருந்தார்.
திடீர் மாயம்
இந்நிலையில் சத்யபிரியா திடீரென தனது பெற்றோர் வீட்டில் இருந்து மாயமானார். இது குறித்து அருப்புக்கோட்டை தாலுகா போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இதற்கிடையில் சத்யபிரியாவின் கணவர் வசந்தபாண்டி மதுரை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.
இதையடுத்து போலீசார் சத்யபிரியாவை தேடும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
சிக்கினார்
போலீசாரின் தீவிர முயற்சியின் பலனாக சாத்தூர் கண்மாய் சூரங்குடியைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான ஞான குருசாமி (26) என்பவர் போலீசாரிடம் சிக்கினார்.
இவரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர் சத்யபிரியாவை கொலை செய்து புதைத்த அதிர்ச்சி தகவல் வெளியானது.
ஒரு நாள் ஞானகுருசாமி செல்போன் மூலம் தொடர்பு கொண்ட போது தவறாக சத்யபிரியாவின் செல்போனுக்கு அழைப்பு சென்றுள்ளது.
கள்ளக்காதல்
இதனை தொடர்ந்து இருவரும் அடிக்கடி செல்போன் மூலம் பேச தொடங்கி, அது கள்ளக்காதலாக மாறியது. ஒரு கட்டத்தில் சத்யபிரியா, ஞான குருசாமியிடம் தன்னை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தியுள்ளார். ஆனால் ஞான குருசாமிக்கு மாறுபட்ட கருத்து இருந்துள்ளது. சம்பவத்தன்று ஞானகுருசாமி, சத்ய பிரியாவை ஆசை வார்த்தை கூறி சாத்தூர் போக்குவரத்து நகருக்கு அழைத்துச் சென்றார்.
கழுத்தை நெரித்து கொலை
அங்கு மறைவான பகுதியில் இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டதை தொடர்ந்து ஞான குருசாமி சத்யபிரியாவின் கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு உடலை அங்கேயே போட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.
மேற்கண்ட விவரங்கள் ஞானகுருசாமியிடம் போலீசார் விசாரணை செய்த போது தெரிய வந்தது.
இதனைத்தொடர்ந்து போலீசார், ஞானகுருசாமியை சாத்தூர் போக்குவரத்து நகருக்கு அழைத்து சென்று அங்கு சத்யபிரியாவவை கொலை செய்து உடலை வீசிச்சென்ற இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
துப்பு துலங்கியது
அங்கு எலும்புகள் தான் கிடந்தன. அதனை சேகரித்த போலீசார் தடயவியல் ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து அருப்புக்கோட்டை தாலுகா போலீசார் இளம்பெண் மாயமான வழக்கை கொலை வழக்காக மாற்றி ஞானகுருசாமியை கைது செய்தனர். சாத்தூர் டவுன் போலீஸ் சரகத்தில் போக்குவரத்து நகரில் இளம்பெண்ணின் உடல் கிடந்தது தொடர்பாக சாத்தூர் போலீசாருக்கு தகவல் தெரியாமல் போனது வியப்பளிப்பதாக உள்ளது. அப்போதே இந்த உடலை கண்டறிந்திருந்தால் இதுபற்றி விசாரணை செய்து இந்த வழக்கில் உடனடியாக துப்புதுலக்கி இருக்க முடியும். ஆனால் இது பற்றிய தகவல் தெரியாமலிருந்த சாத்தூர் போலீசாரின் செயல்பாட்டால் இந்த வழக்கில் எட்டு மாதங்களுக்கு பிறகு துப்பு துலங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
செல்போன் மூலம் ஏற்பட்ட தவறான தொடர்பால் இளம்பெண்ணுக்கு இந்த விபரீத முடிவு ஏற்பட்டு உள்ளது.