எலி மருந்தை தின்ற 10-ம் வகுப்பு மாணவர் சாவு
தோகைமலை அருகே எலி மருந்தை தின்ற 10-ம் வகுப்பு மாணவர் பரிதாபமாக இறந்தார்.
தோகைமலை
10-ம் வகுப்பு மாணவர்
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் தாலுகா புதூர் குடையப்பட்டியை சேர்ந்தவர் பால்சாமி. இவரது வேல்வினோத் (வயது 16). இவர் 10-ம் வகுப்பு படித்து வந்தார். தற்போது கொரோனா தொற்றால் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இதனால் வேல்வினோத் தோகைமலையில் உள்ள தனது உறவினரின் வீட்டில் தங்கி இருந்து கொசூரில் உள்ள ஒரு பேக்கரியில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் தனது தந்தை பால்சாமியிடம், வேல்வினோத் மோட்டார் சைக்கிள் வாங்கி தரும்படி கேட்டுள்ளார். அதற்கு அவர் பள்ளி படிப்பை முடித்தவுடன் வண்டி வாங்கி தருவதாக கூறியுள்ளார்.
சாவு
இதனால் மனமுடைந்த காணப்பட்ட வேல்வினோத் கடந்த 17-ந்தேதி எலி மருந்தை (விஷம்) தின்று வாந்தி எடுத்தான். இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் வேல்வினோத்தை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல்லில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதுகுறித்து பால்சாமி கொடுத்த புகாரின்பேரில், தோகைமலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.