கள்ள நோட்டுகள் வைத்திருந்த வாலிபர் கைது
மன்னார்குடி அருகே கள்ள நோட்டுகள் வைத்திருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து கார் மற்றும் கஞ்சா ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.;
மன்னார்குடி:
மன்னார்குடி அருகே கள்ள நோட்டுகள் வைத்திருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து கார் மற்றும் கஞ்சா ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
ரோந்து பணி
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள அசேஷம் பகுதியில் மன்னார்குடி போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் நின்று கொண்டிருந்த கார் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் காரின் உரிமையாளர் அசேஷம் பகுதியில் ஒரு விடுதியில் அறை எடுத்து தங்கியிருந்தது தெரியவந்தது.
இதனைத்தொடர்ந்து சந்தேகமடைந்த மன்னார்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் உதயகுமார் மற்றும் போலீசார் அந்த விடுதிக்கு சென்று கார் உரிமையாளரிடம் விசாரணை நடத்தினர்.
2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டு
இதில் அவர் திருமக்கோட்டை மகாராஜபுரம் பகுதியை சேர்ந்த மாதவன் (வயது 33) என்பதும், கள்ளநோட்டுகள் வைத்திருந்ததும் தெரிய வந்தது.
இதனையடுத்து மாதவனை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து ரூ.1 லட்சத்து 90 ஆயிரத்திற்கான 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள் மற்றும் கஞ்சா பொட்டலம், கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மாதவனுக்கு கள்ள நோட்டு எப்படி கிடைத்தது என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.