திருவெண்ணெய்நல்லூர் அருகே கத்தியால் வெட்டபட்ட பெண் சாவு கொலை வழக்காக பதிவு செய்து போலீஸ் விசாரணை

திருவெண்ணெய்நல்லூர் அருகே கத்தியால் வெட்டபட்ட பெண் உயிாிழந்தாா். இந்த வழக்கை கொலை வழக்காக பதிவு செய்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Update: 2021-04-25 17:03 GMT
அரசூர், 

திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள சின்ன செவலை கிராமத்தை சேர்ந்த வரதபிள்ளை என்பவரது  மகள் ரேவதி (38). இவருக்கு  திருமணம் ஆகவில்லை. இவர் உடல் வளர்ச்சி குன்றியவர்.  கடந்த 10-ந்தேதி மதியம் வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தார். 

அப்போது அதே ஊரை சேர்ந்த  கெண்டியான் மகன் முத்துக்கண்ணு (வயது 60). மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில இருந்த அவர், தனது ஒரு மாட்டை வெட்டி கொன்றுவிட்டு, மனைவி  நாவம்மாளை அடிப்பதற்கு துரத்திக்கொண்டிருந்தார். 

 நாவம்மாள் ரேவதியின் வீட்டின் வழியாக ஓடிவிட்டார். இந்த நிலையில் ரேவதியின் வீட்டுக்குள் சென்ற முத்துக்கண்ணு, அவரை கத்தியால் தலை, கழுத்து பகுதியில் வெட்டினார்.  

ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்த ரேவதி சிகிச்சைக்காக முண்டியம்பாககம் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து திருவெண்ணெய்நல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனி வழக்குப்பதிவு செய்து, முத்துகண்ணுவை கைது செய்தார்.

இதற்கிடையே உயிருக்கு ஆபத்தான நிலையில்  புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த  ரேவதி  சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். இதையடுத்து இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்