கிருஷ்ணகிரி அருகே துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி துடைப்பத்தால் அடி வாங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன்

கிருஷ்ணகிரி அருகே நடந்த துரியோதனன் படுகளம் நிகழ்ச்சியில் பக்தர்கள் துடைப்பத்தால் அடி வாங்கி தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்.

Update: 2021-04-25 16:40 GMT
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி அருகே நடந்த துரியோதனன் படுகளம் நிகழ்ச்சியில் பக்தர்கள் துைடப்பத்தால் அடி வாங்கி தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்.
திரவுபதி அம்மன் கோவில்
கிருஷ்ணகிரி அருகே உள்ள கூலியம் ஊராட்சி சவுளூர் கிராமத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோவிலில் மகாபாரத திருவிழா நடந்தது. அம்மனேரி,   ஒப்பலக்கட்டு, சவுளூர் ஆகிய கிராம மக்கள் ஒன்று கூடி நடத்திய இந்த மகாபாரத திருவிழா கடந்த 4-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கிருஷ்ணன் பிறப்புடன் தொடங்கிய இந்த விழாவின் போது, அம்மன், பாஞ்சாலி தேவி திருக்கல்யாணம், பாண்டவர் பிறப்பு, பாண்டவர் அரக்கு மாளிகை, அர்ச்சுனன் தபசு, சுபத்திரை திருக்கல்யாணம், கண்ணன் தூது, அரவான் கடபலி, அபிமன்னன் சண்டை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து வந்தது.
துரியோதனன் படுகளம்
கடந்த 20 நாட்களாக நடைபெற்று வந்த இந்த மகாபாரத இதிகாச திருவிழாவின் கடைசி நாளான நேற்று முன்தினம் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் களிமண்ணால் பெரிய அளவில் உருவாக்கப்பட்ட துரியோதனின் உருவத்தை விமன் வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது.
தொடர்ந்து நிகழ்ச்சியை காண கூடியிருந்த மக்கள் கூட்டத்தில், திரவுபதி பாஞ்சாலி தனது கூந்தலை முடிச்சி போட்டு தனது சபதத்தினை நிறைவேற்றியதையடுத்து கிராம மக்கள் பஞ்சபாண்டவர்களின் சிலையை தூக்கியபடி ஆடி ஆரவாரம் செய்து மகிழ்ந்தனர். இதனை தொடர்ந்து பக்தர்கள் துடைப்பத்தால் தலையில் அடி வாங்கி தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றினார்கள். இந்த மகாபாரத திருவிழாவிற்கான ஏற்பாடுகளை அம்மனேரி, ஒப்பலக்கட்டு, சவுளுர் ஆகிய 3 கிராமங்களை சேர்ந்த கிராம மக்கள் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்