கச்சிராயப்பாளையம் அருகே நள்ளிரவில் ஆசிரியையிடம் 9 பவுன் சங்கிலி பறிப்பு

கச்சிராயப்பாளையம் அருகே நள்ளிரவில் தூங்கிக்கொண்டிருந்த ஆசிரியையின் கழுத்தில் கிடந்த 9 பவுன் சங்கிலியை பறித்துச்சென்ற மர்ம மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2021-04-25 16:36 GMT
கள்ளக்குறிச்சி

ஆசிரியை

கச்சிராயப்பாளையம் அருகே வடக்கநந்தல் வடக்குத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் வேல்முருகன்(வயது 40). இவருடைய மனைவி அபிநயா(29). இவர் சங்கராபுரம் அருகே உள்ள அரசம்பட்டு மேல்நிலைப்பள்ளியில் கணித ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். 

இந்த நிலையில் வெப்பத்தின் தாக்கம் காரணமாக நேற்று முன்தினம் இரவு வேல்முருகன் அவரது மனைவி மற்றும் மகன் கோசன் ஆகியோர் வீட்டின் மொட்டை மாடியில் படுத்து தூங்கினர். 

தங்க சங்கிலி பறிப்பு

நள்ளிரவு 1.45 மணியளவில் வீட்டின் மொட்டை மாடிக்கு வந்த மர்ம நபர் அபிநயாவின் கழுத்தில் கிடந்த 9 பவுன் சங்கிலியை பறித்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினான்.
இதில் திடுக்கிட்டு எழுந்த அபிநயா திருடன் திருடன் என கத்தினார். இந்த சத்தம் கேட்டு அருகில் தூங்கிக்கொண்டிருந்த அவரது கணவர் வேல்முருகன், மகன் கோசன் ஆகியோரும் எழுந்து மா்ம நபரை பிடிக்க முயன்றனர். ஆனால் அதற்குள் மர்ம நபர் அங்கிருந்து தலைமறைவாகி விட்டார். பறிபோன தங்க சங்கிலியின் மதிப்பு ரூ.3 லட்சத்து 15 ஆயிரம் இருக்கும் எனகூறப்படுகிறது.

போலீசார் விசாரணை

இதுபற்றிய தகவல் அறிந்து கள்ளக்குறிச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு ராமநாதன், கச்சிராயப்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி மற்றும் போலீசார் விரைந்து வந்து சம்பவம் நடந்த ஆசிரியை அபிநயா வீட்டின் மொட்டை மாடியை பார்வையிட்டனர். பின்னர் ஆசிரியை மற்றும் அவரது கணவர் மற்றும் மகனிடம் தங்கசங்கிலி பறிபோனது குறித்து விசாரணை நடத்தினர்.

பின்னர் அபிநயா கொடுத்த புகாரின் பேரில் கச்சிராயப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். 

வலைவீச்சு

மேலும் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்ம ஜோதி தலைமையில் தனிப்படை அமைத்து நகையை பறித்துச்சென்ற மர்ம நபரை வலைவீசி தேடிவருகிறார்கள். நள்ளிரவில் தூங்கிக்கொண்டிருந்த ஆசிரியையிடம் 9 பவுன் சங்கிலியை மர்ம நபர் பறித்துச்சென்ற சம்பவம் கச்சிராயப்பாளையம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 



மேலும் செய்திகள்