முழு ஊரடங்கையொட்டி கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் கடைகள் அடைப்பு மக்கள் நடமாட்டம் இல்லாததால் சாலைகள் வெறிச்சோடின
முழு ஊரடங்கையொட்டி நேற்று கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் அடைகள் அடைக்கப்பட்டன. வாகன போக்குவரத்து மற்றும் மக்கள் நடமாட்டம் இன்றி சாலைகள் வெறிச்சோடின.
கிருஷ்ணகிரி:
முழு ஊரடங்கையொட்டி நேற்று கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் அடைகள் அடைக்கப்பட்டன. வாகன போக்குவரத்து மற்றும் மக்கள் நடமாட்டம் இன்றி சாலைகள் வெறிச்சோடின.
முழு ஊரடங்கு
கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் நேற்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையொட்டி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.
இதனால் கிருஷ்ணகிரி நகரில் சென்னை சாலை, பெங்களூரு சாலை, ராயக்கோட்டை சாலை, சேலம் சாலை, கே.தியேட்டர் சாலை உள்பட நகரில் உள்ள அனைத்து சாலைகளிலும் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. மருந்து கடைகள், பால் விற்பனை கடைகள் மட்டும் திறந்திருந்தன.
மேலும் மருத்துவமனைகள் இயங்கியது. கிருஷ்ணகிரி நகரில் மக்கள் நடமாட்டம் இல்லாத காரணத்தால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது. முழு ஊரடங்கை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவே பொதுமக்கள் கடை வீதிகளுக்கு வந்து பொருட்களை வாங்கி சென்றார்கள்.
சாலைகள் வெறிச்சோடின
இதே போல கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மத்திகிரி, தேன்கனிக்கோட்டை, தளி, அஞ்செட்டி, ராயக்கோட்டை, உத்தனப்பள்ளி, கெலமங்கலம், பாகலூர். சூளகிரி, பேரிகை, காவேரிப்பட்டணம், ஊத்தங்கரை, மத்தூர், பர்கூர், கல்லாவி, வேப்பனப்பள்ளி, குருபரப்பள்ளி உள்பட அனைத்து பகுதிகளிலும் கடைகள் மூடப்பட்டிருந்தன. ஆட்டோக்கள் உள்பட எந்த வாகனங்களும் இயங்கவில்லை.கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பண்டி கங்காதர் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் போலீசார் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர். அவர்கள் மாவட்டத்தில் முக்கிய சாலைகளில் இருந்தவாறு தேவையின்றி சாலைகளில் செல்பவர்களை பிடித்து எச்சரித்து அனுப்பி வைத்தனர். விதிமுறையை மீறியவர்களுக்கு போலீசார் அபராதம் விதித்தனர்.
ஓசூர்
முழு ஊரடங்கையொட்டி ஓசூரில் உள்ள வணிக வளாகங்கள், மளிகை கடைகள், ஓட்டல்கள், துணி கடைகள், பேக்கரி கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. தனியார் மற்றும் அரசு போக்குவரத்து பஸ்களும் முழுமையாக இயக்கப்படாததால பஸ் நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது. நகரின் பல்வேறு இடங்களில், ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டு இருந்த திருமண நிகழ்ச்சிகள், அரசின் விதிமுறைகளுக்குட்பட்டு எளிமையாக நடைபெற்றன. நகரம் முழுவதும் போலீசார் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மேலும், தேவையின்றி வாகனங்களில் வெளியே வந்தவர்களை தடுத்து நிறுத்தி, எச்சரித்து அனுப்பினர். சாலைகளில் நடமாட்டம் இல்லாததால் ஓசூர் நகரமே வெறிச்சோடி காணப்பட்டது.