வழிபாட்டு தலங்களில் பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு

முழு ஊரடங்கு எதிரொலியால் வழிபாட்டு தலங்களில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. வீட்டிலேயே கிறிஸ்தவர்கள் பிரார்த்தனை செய்தனர்.

Update: 2021-04-25 15:12 GMT
திருப்பூர்
முழு ஊரடங்கு எதிரொலியால் வழிபாட்டு தலங்களில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. வீட்டிலேயே கிறிஸ்தவர்கள் பிரார்த்தனை செய்தனர்.
வீட்டிலேயே பிரார்த்தனை
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் திருப்பூர் மாவட்டம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. வழிபாட்டு தலங்களில் பொதுமக்கள் வழிபாடு நடத்த தடை விதிக்கப்பட்டது. நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் கிறிஸ்தவர்கள் தேவாலயங்களுக்கு சென்று பிரார்த்தனை செய்வது வழக்கம். ஆனால் முழு ஊரடங்கு காரணமாக கிறிஸ்தவர்கள் நேற்று வீட்டிலேயே பிரார்த்தனை செய்தனர். வீட்டில் பெரியவர்கள் முன்னிலையில் அனைவரும் சேர்ந்து பிரார்த்தனையில் ஈடுபட்டனர். சில வீடுகளில் டி.வி.யில் பிரார்த்தனை நடைபெறுவதை பார்த்து கூட்டு பிரார்த்தனை செய்தனர். திருப்பூர் மாவட்டம் முழுவதும் கிறிஸ்தவ மக்கள் தங்கள் வீடுகளிலேயே பிரார்த்தனை செய்தனர்.
முஸ்லிம்கள் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு நோன்பு இருந்து வருகிறார்கள். முழு ஊரடங்கால் பள்ளிவாசல்களுக்கு செல்ல முடியாது என்பதால் வீட்டிலேயே இருந்து தொழுகை நடத்தினார்கள். குடும்ப உறுப்பினர்கள் வீட்டின் மேல்மாடியில் அமர்ந்து தொழுகையில் ஈடுபட்டனர். ரம்ஜான் நோன்பு இருப்பவர்கள் தொழுகையை தவறாமல் பின்பற்றுவார்கள். இதனால் வீட்டிலேயே நேற்று தொழுகையை தொடர்ந்தனர்.
கோவில்கள் வெறிச்சோடியது
இதுபோல் முழு ஊரடங்கு காரணமாக பக்தர்கள் கோவிலுக்கு வரவில்லை. கோவில்களில் வழக்கமான பூஜை நடைபெற்றது. ஆனால் பக்தர்கள் இல்லாமல் கோவில் வெறிச்சோடி காணப்பட்டது. இன்று (திங்கட்கிழமை) முதல் ஊரடங்கில் புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுகிறது. கோவில்களில் பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
-

மேலும் செய்திகள்