கொரோனா பாதிப்பு இல்லாதபோதும் சிகிச்சை பலனின்றி இறப்பு அதிகரிப்பு
கொரோனா அறிகுறியுடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப் படுபவர்களில் பாதிப்பு இல்லாதபோதும் சிகிச்சை பலனின்றி இறந்து வருகின்றனர்.
ராமநாதபுரம்,
கொரோனா அறிகுறியுடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படுபவர்களில் பாதிப்பு இல்லாதபோதும் சிகிச்சை பலனின்றி இறந்து வருகின்றனர்.
எண்ணிக்கை
ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. கடந்த சில மாதங்களாக ஒற்றை இலக்க எண்ணிக் கையில் இருந்து வந்த நோய்த்தொற்று பாதிப்பு கடந்த சில நாட்களாக இரட்டை இலக்க எண்ணிக்கையில் மாறத்தொடங்கி நேற்று முன்தினம் 105 என்று மூன்று இலக்க எண்ணிக்கையை தொட்டுள்ளது. மாவட்டத்தில் அதிகரித்துவரும் இந்த நோய்த்தொற்று காரணமாக மக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. முக கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல், கை கழுவுதல், பொது இடங்களில் கூடுவதை தவிர்த்து கொள்ளுதல் போன்றவை மூலம் நோய்பரவாமல் தடுத்து தற்காத்துக்கொள்ள வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
உடல் பாதிப்பு
நாள்தோறும் ஏராளமானோர் தொற்று அறிகுறியுடன் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட சோதனையில் நோய்த்தொற்று இல்லை என்று முடிவு தெரிய வந்த நிலையிலும் அதிக உடல் பாதிப்பு காரணமாக கடந்த சில நாட்களாக பலர் தொடர்ந்து இறந்து வருவது பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
நோய்த்தொற்று இல்லாதபோதும் அதற்கான அறிகுறிகளுடன் உடல் பாதிப்புகள் அதிகரித்து ஒரு கட்டத்தில் இறந்துவிடுகின்றனர். அதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. இவ்வாறு மாவட்டத்தில் பலர் இறந்துவருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இதனால் நோயாளிகளின் குடும்பத்தினர் மட்டுமல்லாமல் பொதுமக்களும் கடும் அச்சமடைந்துள்ளனர். நோய்த்தொற்று அறிகுறிகளுடன் அனுமதிக் கப்பட்டு பரிசோதனை முடிவு வரும் முன்னர் இறந்துவிடுவதும் முடிவு வரும்வரை உடலை பாதுகாத்து வைப்பதும் பரிசோதனை முடிவில் தொற்று இல்லை என வந்ததும் உடலை ஒப்படைப்பது அதிகரித்து வருகிறது.
அதிகரிப்பு
நோய்த்தொற்று இல்லை என்ற போதிலும் அறிகுறி அதிகரித்து சிகிச்சை பலனின்றி பலர் பலியாகி வருவதற்கான காரணம் என்ன என்பது புரியாத புதிராக உள்ளது. இதுகுறித்து சுகாதாரதுறையினரிடம் கேட்டபோது நோய் தொற்று அறிகுறியுடன் வந்தாலும் தொற்று இல்லை என்றால் அவர்களின் உடலில் இதர நோய் பாதிப்புதான் இறப்புக்கு காரணமாக இருக்கும் என தெரிவித்தனர்.
கடந்த சில நாட்களில் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் நோய் தொற்று இல்லாமல் உடல் பாதிப்பு அதிகமாகி சிகிச்சை பலனின்றி பலியானவர்கள் அதிகரித்து வருகின்றனர். நேற்று முன்தினம் கூட ஒருவரும் நேற்று 2 பேரும் நோய் தொற்று பாதிப்பு இல்லாமல் நோய் அறிகுறியுடன் சிகிச்சை பெற்று வந்த நிலையில் பலியாகி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.