சாலையோரம் நிறுத்தப்பட்ட சரக்கு லாரிகள்
முழு ஊரடங்கால் தமிழக-கேரள எல்லையில் சாலையோரத்தில் சரக்கு லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டன. அத்தியாவசிய சேவை என கூறியும் அனுமதி மறுக்கப்பட்டது.;
கூடலூர்,
கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களின் எல்லையில் தமிழக பகுதியில் கூடலூர் உள்ளது. கர்நாடகாவில் இருந்து கேரளாவிற்கு கூடலூர் வழியாக தினமும் அத்தியாவசிய பொருட்கள் சரக்கு லாரிகளில் கொண்டு செல்லப்படுகிறது.
பின்னர் அங்கிருந்து லாரிகள் திரும்பி செல்வதும் வாடிக்கையாக உள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க நேற்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது.
இதனால் கேரளாவில் இருந்து கர்நாடகாவுக்கு திரும்பி செல்ல நேற்று அதிகாலை 4 மணியளவில் சரக்கு லாரிகள் வந்தன. ஆனால் கூடலூர்-கேரள எல்லையான நாடுகாணியில் சோதனைச்சாவடி அடைக்கப்பட்டு இருந்தது.
மேலும் முழு ஊரடங்கை காரணம் காட்டி சரக்கு லாரிகளை கூடலூருக்குள் அனுமதிக்க போலீசார் மறுத்தனர். இதனால் சாலையோரம் சரக்கு லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டன. காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை ஏற்றி செல்லும் சரக்கு லாரிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது என்று டிரைவர்கள் கூறினர்.
ஆனால் அதை போலீசார் ஏற்கவில்லை. இதனால் அவர்கள் வேறு வழியின்றி காத்திருந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த தேவாலா போலீஸ் துணை சூப்பிரண்டு அமீர் அகமது, எல்லையில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ள சரக்கு லாரிகளை உடனடியாக அனுப்பி வைக்கும்படி போலீசாருக்கு உத்தரவிட்டார்.
அதன்பின்னர் காலை 10 மணிக்கு சரக்கு லாரிகளை கர்நாடகா செல்ல போலீசார் அனுமதித்தனர்.