ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடைகள், தொழிற்சாலைகள் மூடப்பட்டன.பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
ராணிப்பேட்டை மாவட்டத்தில் முழு ஊரடங்கு ராணமாக அனைத்து கடைகள் மற்றும் தொழிற்சாலைகள் மூடப்பட்டன. இதனால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை
கொரோனா பரவுதலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. தமிழக அரசு இரவு நேர ஊரடங்கையும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கையும் அமல்படுத்தியுள்ளது. அதன்படி நேற்று ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கை முன்னிட்டு ராணிப்பேட்டை, சிப்காட் பகுதிகளில் கடைகள், ஓட்டல்கள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தன.
மேலும் பஸ்கள், லாரிகள், ஆட்டோக்கள் உள்ளிட்ட எந்த வாகனங்களும் ஓடவில்லை. தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய 4 மாநிலங்களை இணைக்கும் சென்னை - மும்பை தேசிய நெடுஞ்சாலை, எப்போதும் பரபரப்பாக காணப்படும். ஊரங்கு காரணமாக வாகனங்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.
ராணிப்பேட்டை, மற்றும் சிப்காட் பகுதியில் அனைத்து தொழிற்சாலைகளும் மூடப்பட்டிருந்தன. ராணிப்பேட்டை முத்துக்கடை உள்ளிட்ட பகுதிகளில், சாலைகளில் போலிசார் தடுப்புகளை ஏற்படுத்தி, வாகனங்களில் வந்தவர்களை எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர். கடைகள் திறக்கப்படாததாலும், வாகனங்கள் ஓடாததாலும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
சோளிங்கர்
சோளிங்கரில் யோக நரசிம்மர் கோவில், ஆஞ்சநேயர் கோவில், ஊர்கோவிலான பக்தோசித பெருமாள் கோவில் செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டது. பேரூராட்சி பகுதியில் மளிகை கடைகள், ஓடடல்கள், சலூன் கடைகள், மதுபான கடைகள், கறிகடைகள், வணிக வளாகங்கள் திரையரங்குகள் ஜவுளிகடைகள் உள்ளிட்ட அனைத்தும் முடப்பட்டது. எப்போதும் பரபரப்பாக இருக்கும் பஜார் தெரு, அண்ணா சிலை கூட்ரோடு, பஸ் நிலையம், காந்தி சாலை அனைத்தும் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.
அரக்கோணம்
அரக்கோணத்தில் அத்தியாவசிய தேவையான மருந்து கடை, பால் விற்பனை நிலையங்கள் தவிர, இறைச்சி கடைகள், மீன் மார்க்கெட், காய்கறி, மளிகை கடைகள், டீ கடைகள், ஓட்டல்கள் என அனைத்தும் நேற்று அடைக்கப்பட்டிருந்தது. இதனால் எப்போதும் மக்கள் கூட்டமாக இருக்கும் பழனிபேட்டை, சுவால் பேட்டை, பஜார் பகுதிகள் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.