உரங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால் உரிமம் ரத்து
ராமநாதபுரம் மாவட்டத்தில் உரங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால் உரிமம் ரத்து செய்யப்படும் என்று வேளாண்மை இணை இயக்குனர் எச்சரித்துள்ளார்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்டத்தில் உரங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால் உரிமம் ரத்து செய்யப்படும் என்று வேளாண்மை இணை இயக்குனர் எச்சரித்துள்ளார்.
உரங்கள் இருப்பு
ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு லட்சத்து 75 ஆயிரம் எக்ேடர் விவசாய பரப்பளவு உள்ளது. இந்த நிலங்களில் வழக்கமாக ஆண்டு தோறும் ஒரு லட்சத்து 34 ஆயிரம் எக்ேடரில் நெல் விவசாயமும், 16 ஆயிரம் எக்ேடர் நிலத்தில் மிளகாய் விவசாயமும், ஆயிரம் எக்ேடரில் உளுந்து, எள் விவசாயமும், 6 ஆயிரம் எக்ேடரில் பருத்தி விவசாயமும் மீதம் உள்ள நிலங்களில் சிறுதானிய பயிர்களும் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது.
கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை அளவுக்கு அதிகமாக பெய்து நெல் உள்ளிட்ட விவசாயம் பாதிக்கப்பட்டுள்ள போதிலும், மீதம் உள்ள தண்ணீரை பயன்படுத்தி 2-ம் போகமாக எள், உளுந்து சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இதில் தற்போது 4 ஆயிரம் எக்ேடர் நிலத்தில் பருத்தியில் நல்ல மகசூல் ஏற்பட்டுள்ளது. இந்த ஆண்டு கடந்த ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் 251.45 மி.மீ மழை பெய்துள்ளது.
இந்த ஆண்டு வெயில் காலத்தில் மண்ணின் ஈரப்பதத்தை தக்க வைக்கும் வகையில் விவசாயிகள் கோடை உழவு செய்து வருகின்றனர். மாவட்டத்தில் 3 ஆயிரத்து 700 டன் யூரியா உரம், 550 டன் டி.ஏ.பி., 300 டன் பொட்டாஷ், ஆயிரத்து 50 டன் காம்ப்ளக்ஸ் உரம் என 5 ஆயிரத்து 600 டன் உரங்கள் 130 தனியார் மற்றும் கூட்டுறவு விற்பனை நிலையங் களில் இருப்பு வைக்கப்பட்டு உள்ளது. கடந்த 2020-21ம் ஆண்டு விலையிலேயே 2021-22ம் ஆண்டிற்கான டி.ஏ.பி., பொட்டாஷ், சூப்பர் பாஸ்பேட், காம்ப்ளக்ஸ் உரங்களை விற்பனை செய்ய வேண்டும் என மத்திய உரத்துறை உத்தரவிட்டுள்ளது.
உரிமம் ரத்து
ராமநாதபுரம் மாவட்டத்தில் விவசாயிகளிடம் உரங்களை கூடுதல் விலைக்கு விற்றால் உரக்கட்டுப்பாடு சட்டம் 1985-ன் கீழ் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். உரங்கள் விற்பனை செய்பவர்கள் அனுமதி வழங்கப்பட்ட நிறுவனங்களிடம் மட்டுமே உரங்களை கொள்முதல் செய்து உர மூடைகளில் அச்சிடப்பட்டுள்ள அதிகபட்ச விலைக்கு மிகாமல் உரங்களை உரிய ரசீது வழங்கி விற்பனை செய்ய வேண்டும். அதிகாரிகள் திடீர் ஆய்வின்போது கூடுதல் விலைக்கோ, உரிய ஆவணங்கள் இல்லாமலோ உரம் விற்பனை செய்வது கண்டறியப் பட்டால் உரக்கட்டுப்பாடு சட்டத்தின்படி கடும் நடவடிக்கை எடுப்பதோடு சம்பந்தப்பட்ட உர விற்பனை உரிமம் ரத்து செய்யப்படும். கொரோனா வேகமாக மீண்டும் பரவிவருவதால் விவசாயிகள் உரங்கள் வாங்க வரும்போது முககவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் வந்து செல்ல வேண்டும். இந்த தகவலை ராமநாதபுரம் வேளாண்மை இணை இயக்குனர் டாம் பி சைலஸ் தெரிவித்துள்ளார்.