ஊரடங்கால் சாலைகள் வெறிச்சோடின
திருப்பூர் மாவட்டத்தில் ஊரடங்கால் பொதுமக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கினார்கள். வாகன ஓட்டம் இல்லாததால் சாலைகள் வெறிச்சோடின. கடைகள் மார்க்கெட்டுகள் உழவர் சந்தைகள் அனைத்தும் மூடப்பட்டன.
திருப்பூர்
திருப்பூர் மாவட்டத்தில் ஊரடங்கால் பொதுமக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கினார்கள். வாகன ஓட்டம் இல்லாததால் சாலைகள் வெறிச்சோடின. கடைகள் மார்க்கெட்டுகள் உழவர் சந்தைகள் அனைத்தும் மூடப்பட்டன.
முழு ஊரடங்கு
கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் ஞாயிற்றுக்கிழமையான நேற்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. திருப்பூர் மாவட்டம் முழுவதும் நேற்று முழு ஊரடங்கு அமலானது. இதனால் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. சாலைகளில் வாகன போக்குவரத்து இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.
பொதுவாக ஞாயிற்றுக்கிழமை அன்று தென்னம்பாளையத்தில் உள்ள மீன் மார்க்கெட்டில் கூட்டம் அலைமோதும். ஆனால் முழு ஊரடங்கு காரணமாக நேற்று மீன் மார்க்கெட் மூடப்பட்டது. அதுபோல் மாநகர பகுதிகளில் இறைச்சி, மீன் கடைகள் செயல்படவில்லை.
திருப்பூரில் வடக்கு உழவர் சந்தை, தெற்கு உழவர் சந்தை செயல்படவில்லை. உழவர் சந்தை நுழைவு கேட்டுகள் மூடப்பட்டு இருந்தன. விவசாயிகள் காய்கறிகளை கொண்டு வர வேண்டாம் என்று அறிவிப்பு செய்யப்பட்டு இருந்தது. காட்டன் மார்க்கெட் வளாகத்தில் உள்ள தினசரி காய்கறி மார்க்கெட் கடைகள் அனைத்தும் மூடப்பட்டன. அதுபோல் பூ மார்க்கெட் கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. இதனால் மார்க்கெட் ஆள்நடமாட்டம் இன்றி வெறிச்சோடி கிடந்தது.
மளிகை கடைகள்
திருப்பூர் மாநகர பகுதிகளில் மளிகை கடைகள், காய்கறி கடைகள் உள்ளிட்ட சிறு கடைகள் கூட திறக்கப்படவில்லை. அனைத்து கடைகளும் மூடப்பட்டு இருந்தன. ஜவுளிக்கடைகள், நகைக்கடைகளில் ஞாயிற்றுக்கிழமை கூட்டம் அதிகம் இருப்பது வழக்கம். முழு நேர ஊரடங்கு காரணமாக ஜவுளிக்கடைகள், நகைக்கடைகள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தன. அதுபோல் எலெக்ட்ரானிக் பொருட்கள் விற்பனை கடைகள், செல்போன் கடைகள் வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை கடைகள் பெரிய வணிக வளாகங்கள், பலசரக்கு அங்காடிகள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தன. ஓட்டல்கள் பேக்கரிகள் டீக்கடைகள் பெரும்பாலானவை மூடப்பட்டு இருந்தன. ஒரு சில ஓட்டல்கள் மட்டுமே திறந்து இருந்தன. பார்சல் மட்டுமே வழங்கப்பட்டன.
சாலைகள் வெறிச்சோடின
அரசு மற்றும் தனியார் பஸ்கள், ஆட்டோக்கள், வேன், டாக்சி உள்ளிட்டவை ஓடவில்லை. இதனால் வாகன நடமாட்டம் இல்லாமல் திருப்பூரில் உள்ள பிரதான சாலைகள் வெறிச்சோடி கிடந்தன. திருப்பூர் பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம், கோவில்வழி, யுனிவர்செல் தியேட்டர் முன்பு ஆகிய பஸ்நிலையங்களில் பஸ்கள் இல்லாமல் வெறிச்சோடி கிடந்தன. அவினாசி ரோடு, குமரன் ரோடு, காலேஜ் ரோடு, பி.என்.ரோடு, காங்கேயம் ரோடு, தாராபுரம் ரோடு, மங்கலம் ரோடு, பல்லடம் ரோடு ஆகிய ரோடுகளில் பல இடங்களில் போலீசார் தடுப்புகள் அமைத்து வாகன நடமாட்டத்தை கண்காணித்தார்கள்.
திருப்பூர் பழைய பஸ் நிலையம் முன்புறம் உள்ள மேம்பாலத்தில் வாகனம் செல்ல முடியாத வகையில் இரும்பு தடுப்புகள் இருபுறமும் வைத்து அடைக்கப்பட்டன. முக்கிய சாலை சந்திப்பு பகுதிகளில் 10-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொண்டனர். மருத்துவமனை மற்றும் அவசர தேவைக்கு வாகனத்தில் செல்பவர்களை மட்டும் போலீசார் விசாரித்து அனுப்பி வைத்தனர். அத்தியாவசிய தேவையில்லாமல் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் சுற்றித்திரிந்தவர்களுக்கு அபராத நடவடிக்கை மேற்கொண்டனர்.
ரெயில்கள் ஓடின
ரெயில்கள் வழக்கம் போல் ஓடின. இதனால் திருப்பூர் ரெயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. மருந்து கடை, பால் விற்பனை நிலையம், பெட்ரோல் விற்பனை நிலையங்கள் திறந்து இருந்தன. ஆம்புலன்சுகள் மற்றும் அத்தியாவசிய தேவைக்கான வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் நிரப்பப்பட்டன. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் செயல்பட்டன. மருத்துவமனைக்கு வாகனங்களில் சென்ற நோயாளிகளை போலீசார் அனுமதித்தனர். மக்கள் வீட்டிலேயே பொழுதை கழித்தனர். திருப்பூர் மாநகரம் முழுவதும் முழு ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்பட்டது.இதுபோல் திருப்பூர் மாவட்டம் முழுவதும் முழு ஊரடங்கால் வாகன நடமாட்டம் இல்லாமல் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. மக்கள் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர்.
அவினாசி
முழு ஊரடங்கால் அவினாசி பெருமாநல்லூர் பல்லடம் சேவூர் ஊத்துக்குளி ஆகிய பகுதிகளில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தது. மருந்துக்கடைகள் பால் நிறுவனங்கள் திறந்திருந்தன. ரோட்டில் ஆள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி கிடந்தது. ஆட்டோக்கள் ஒடவில்லை. சினிமா தியேட்டர்கள் மூட்பட்டது. நேற்று கடையடைப்பு என்பதால் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான காய்கறிகள் மளிகை பொருட்கள் உள்ளிட்ட அனைத்தும் நேற்று முன்தினம் இரவு வாங்கி வைத்துகொண்டனர். பல்லடம் தினசரி மார்க்கெட் பகுதி, நால் ரோடு உள்ளிட்ட பல பகுதிகளில் போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர் அப்போது அந்த வழியாக வந்தவர்களை விசாரித்து மேற்கொண்டு பயணம் செய்ய அனுமதித்தனர்.
பெருமாநல்லூர் நால்ரோடு கணக்கம்பாளையம், பொங்குபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன. வாகனங்கள் எதுவும் செல்லாத்தால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. போலீசார் பாதுகாப்பை பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அம்மா உணவகங்களில் அலைமோதிய கூட்டம்
முழு ஊரடங்கு காரணமாக ஓட்டல்கள் பேக்கரிகள் மெஸ் உள்ளிட்டவை செயல்படவில்லை. ஒரு சில ஓட்டல்கள் மட்டுமே திறந்து இருந்தன. பார்சல்கள் மட்டுமே வழங்கப்பட்டன. ஆனால் மாநகரில் உள்ள 10 அம்மா உணவகங்கள் நேற்று செயல்பட்டன. ரோட்டோரம் தங்கியிருப்பவர்கள், பஸ், ரெயில்கள் மூலமாக வந்த வெளியூரை சேர்ந்தவர்கள் சாப்பிடுவதற்கு வழியின்றி சிரமப்பட்டனர். இவர்கள் அம்மா உணவகங்களுக்கு படையெடுத்தனர். இதனால் அனைத்து அம்மா உணவகங்களிலும் நேற்று மக்கள் கூட்டம் அலைமோதியது.
வடமாநில தொழிலாளர்கள் தவிப்பு
திருப்பூர் ரெயில் நிலையம் முன்பு நேற்று காலை 200க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் காத்திருந்தனர். சிலர் சொந்த ஊருக்கு செல்வதற்காகவும், சிலர் திருப்பூருக்கு வேலை தேடி வந்தவர்களாகவும் இருந்தனர். நேற்றுமுன்தினம் இரவு முதல் வடமாநில தொழிலாளர்கள் ரெயில் நிலையத்தில் காத்திருந்தனர். டீக்கடை, பேக்கரி, ஓட்டல்கள் இல்லாததால் சாப்பிடுவதற்கு வழியின்றி ஆண்களும், பெண்கள், சிறுவர்கள் என அனைவரும் தவித்தனர். இவர்கள் நேற்று காலை அம்மா உணவகங்களில் சாப்பாடு வாங்கி சாப்பிட்டார்கள். வேலை தேடி திருப்பூர் வந்தவர்களும் வாகனங்கள் ஓடாததால் ரெயில் நிலையம் முன்பு காத்திருந்தனர்.
சைவ பிரியர்கள் திண்டாட்டம்
முழு ஊரடங்கு காரணமாக நேற்று ஓட்டல்கள் பெரும்பாலானவை திறக்கவில்லை. ஒரு சில ஓட்டல்களே திறந்து இருந்தன. பெரும்பாலும் பிரியாணி கடைகளே செயல்பட்டன. அவற்றிலும் பார்சல் மட்டுமே அனுமதிக்கப்பட்டன. இதன்காரணமாக திருப்பூரில் தங்கியிருந்து தொழில் நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் சாப்பாடு கிடைக்காமல் பெரிதும் சிரமம் அடைந்தனர். குறிப்பாக சைவ பிரியர்கள் சைவ உணவு கிடைக்காமல் திண்டாடி போனார்கள். முக்கிய சைவ ஓட்டல்கள் அனைத்தும் மூடியே இருந்தன. அதனால் சைவ சாப்பாட்டை தேடி அலைந்தனர். சில பகுதிகளில் தள்ளுவண்டிகளில் சாம்பார் சாதம், தக்காளி சாதம், தயிர் சாதம் பொட்டலம் விற்பனை செய்யப்பட்டது. அவற்றை வாங்கி சாப்பிட்டு பசியாற்றினார்கள்.
பனியன் நிறுவனங்கள் செயல்படவில்லை
ஞாயிற்றுக்கிழமை பெரும்பாலும் பனியன் நிறுவனங்களுக்கு விடுமுறை வழங்கப்படும். இரவு நேர ஊரடங்கு மற்றும் முழு ஊரடங்கு காரணமாக ஏற்றுமதி நிறுவனங்கள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் பனியன் நிறுவன வளாகத்தில் விடுதியில் தங்கியிருக்கும் தொழிலாளர்களை கொண்டு பனியன் நிறுவனங்கள் செயல்படலாம் என்று அறிவிக்கப்பட்டது. இருப்பினும் பெரும்பாலான பனியன் நிறுவனங்கள் செயல்படவில்லை.
விளையாட்டு மைதானமாக மாறிய சாலைகள்
முழு ஊரடங்கு காரணமாக வாகன போக்குவரத்து முற்றிலும் இல்லாமல் மாநகரம் வெறிச்சோடி காணப்பட்டது. இந்தநிலையில் குடியிருப்பு பகுதிகளில் உள்ள சாலைகளில் சிறுவர்கள் நேற்று கிரிக்கெட் விளையாடி பொழுதை கழித்தனர். அதுபோல் இளைஞர்கள் இறகு பந்து விளையாடினார்கள். பல சாலைகள் சிறுவர்களின் விளையாட்டு மைதானமாக மாறியது.