ஆக்சிஜன், மருந்துகள் போதிய அளவு இருப்பு உள்ளது. கலெக்டர் சிவன்அருள் தகவல்
திருப்பத்தூர் மாவட்டத்தில் கரோனா நோயாளிகளுக்கு தேவையான ஆக்சிஜன் மற்றும் மருந்துகள் போதிய அளவு இருப்பு உள்ளதாக கலெக்டர் சிவன்அருள் தெரிவித்தார்.
வாணியம்பாடி
கலெக்டர் ஆய்வு
திருப்பத்தூர் மாவட்டத்தில் ஜோலார்பேட்டை, ஆம்பூர், வாணியம்பாடி, திருப்பத்தூர் பகுதிகளில் நடைபெற்று வரும் சுகாதாரப் பணிகள், கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள், முழு ஊரடங்கு நேரத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு குறித்து கலெக்டர் சிவன் அருள் ஆய்வு செய்தார்.
அப்போது வாணியம்பாடி நியூடவுன் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையத்தையும், கொரோனா பரிசோதனை செய்யும் இடத்தையும், சிறப்பு தனிமைப்படுத்துதல் இடத்தையும், பொது சுகாதார பணியையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் வாணியம்பாடியில் நிருபர்களிடம் கூறியதாவது:-
சித்த மருத்துவ சிகிச்சை மையம்
திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று இரண்டாம் அலையை கட்டுப்படுத்த அனைத்து ஏற்பாடுகளும் முழுமையாக செய்யப்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் ஆக்சிஜன் கொண்ட படுக்கை வசதி, கொரோனா சிகிச்சை மையம், தொற்று பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களை சேர்ந்தவர்களை தனிமைப் படுத்தும் மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் மொத்தம் 863 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு 131 பேருக்கு நோய் தொற்று உறுத்ி செய்யப்பட்டுள்ளது. நாட்டறம்பள்ளி அருகே புதுப்பேட்டையில் 50 படுக்கை வசதியுடன் சித்த மருத்துவ சிகிச்சை மையம் ஏற்படுத்தப்பட்டு அதில் தொற்று பாதிக்கப்பட்டவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
ஆக்சிஜன், மருந்துகள் இருப்பு உள்ளது
நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனையில் 50 படுக்கை கொண்ட கூடுதல் கட்டிடம் தயார் செய்யப்பட்டு அதில் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வசதி செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மொத்தம் 2 ஆயிரம் படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது.
மாவட்டத்தில் நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்கு போதுமான ஆக்சிஜன் தயார் நிலையில் உள்ளது. மேலும் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் கூடுதலாக 1½ டன் கொள்ளளவு கொண்ட ஆக்சிஜன் பிளானட் ஏற்படுத்தி அதன் மூலன் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வழங்கப்படுகிறது. அதேபோன்று மாவட்டத்தில் போதுமான அளவில் உயிர் காக்கும் மருந்துகளும் உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது வட்டார மருத்துவ அலுவலர் பசுபதி, நகராட்சி ஆணையாளர் அண்ணாமலை, டாக்டர் தினகரன், நகராட்சி சுகாதார அலுவலர் கணேஷ், சுகாதார ஆய்வாளர் அலி ஆகியார் உடன் இருந்தனர்.