பொதுமக்கள் தாமாக முன்வந்து தடுப்பூசி போட்டு கொள்ளவேண்டும் - செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் வேண்டுகோள்

பொதுமக்கள் தாமாக முன்வந்து தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Update: 2021-04-25 12:27 GMT
தாம்பரம், 

சென்னையை அடுத்த தாம்பரம், செம்பாக்கம், பல்லாவரம் ஆகிய நகராட்சி பகுதிகளில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ஜான்லூயிஸ் நேற்று ஆய்வு செய்தார்.

செம்பாக்கம் நகராட்சி பகுதியில் ஆய்வு மேற்கொண்ட பிறகு நிருபர்களிடம் மாவட்ட கலெக்டர் ஜான்லூயிஸ் கூறியதாவது:-

செங்கல்பட்டு மாவட்டத்தை பொருத்தவரை இதுவரை 19 ஆயிரம் டோஸ் தடுப்பூசி மருந்துகள் இருப்பு உள்ளது. மேலும் தடுப்பூசிகளை அதிகரிக்க கோரி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். எனவே செங்கல்பட்டு மாவட்டத்தில் தடுப்பூசி தட்டுப்பாடு இல்லை.

மேடவாக்கம் பிளாக் பகுதியில் ஒரு நாளைக்கு 4000 தடுப்பூசி செலுத்த வேண்டும் என்ற இலக்குடன் செயல்பட்டு வருகிறோம். தாம்பரம் மற்றும் பல்லாவரம் தாலுகாக்களில் அதிக பாதிப்பு இருப்பதால் இங்கு அதிகமான தடுப்பூசிகளை போட்டு மக்களை நோய் தொற்றில் இருந்து பாதுகாக்கும் நடவடிக்கையை தீவிரப்படுத்தி கொண்டிருக்கிறோம்.

கடந்த ஆண்டு செங்கல்பட்டு மாவட்டத்தில் எந்தெந்த பகுதிகள் அதிகமாக பாதிக்கப்பட்டு இருந்ததோ அதே பகுதிகளில்தான் இந்த வருடமும் பாதிப்புகள் ஏற்பட்டு இருக்கிறது. வேலை, வியாபாரம் நிமித்தமாக பொதுமக்கள் அதிகம் இருக்கும் பகுதி என்பதால் இந்த பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

இதனை கட்டுப்படுத்த எந்த குடும்பத்தில் தொற்று இருக்கிறதோ அவர்களை தனிமைப்படுத்தி கண்காணித்து வருகிறோம். ஒரே தெருவில் 3 பேருக்கு மேல் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்தால் அந்த தெருவை கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிப்போம். ஆனால் இதுவரை அதுபோன்ற தேவை ஏற்படவில்லை.

பொதுமக்கள் தாமாகவே முன்வந்து தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். பொதுமக்களின் சமுதாய பங்களிப்பு மூலமே கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்த முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்