மணலி புதுநகரில் தனியார் பள்ளி பணியாளர்கள் 24 பேருக்கு கொரோனா - பள்ளியை மூடி சீல் வைத்து சுகாதாரத்துறையினர் நடவடிக்கை

மணலி புதுநகரில் தனியார் பள்ளி பணியாளர்கள் 24 பேருக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதை தொடர்ந்து பள்ளியை மூடி சீல் வைத்து சுகாதாரத்துறையினர் நடவடிக்கை எடுத்தனர்.

Update: 2021-04-25 10:26 GMT
மீஞ்சூர்,

மீஞ்சூர் அடுத்த விச்சூர் ஊராட்சியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 வரை மாணவ, மாணவியர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக பள்ளி திறக்கப்படாமல் கொரோனா வைரஸ் தொற்றால் மூடப்பட்ட நிலையில், ஆன்லைன் மூலம் மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.

இந்த நிலையில், விடுதியுடன் கூடிய அப்பள்ளியில் தங்கி உள்ள பணியாளர்கள் 24 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டதாக சோழவரம் வட்டார சுகாதார துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பொன்னையா உத்தரவின் பேரில், மாவட்ட பொது சுகாதார துறை இணை இயக்குனர் ஜவகர்லால் ஆலோசனையில் பேரில், சோழவரம் ஒன்றிய ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார குழுவினர் உள்ளிட்டோர் பள்ளிக்கு சென்று ஆய்வு செய்தனர்.

விடுதியில் தங்கி உள்ள பணியாளர்கள் 24 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்ததையடுத்து, பள்ளி மற்றும் விடுதியை மூடி சீல் வைத்தனர்.

மேலும் செய்திகள்