புதுச்சேரியில் புதிதாக 899 பேருக்கு பாதிப்பு: ஒரேநாளில் கொரோனாவுக்கு 9 பேர் பலி

புதுவையில் 9 பேர் கொரோனாவுக்கு பலியான நிலையில் புதிதாக 899 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Update: 2021-04-25 05:55 GMT
புதுச்சேரி, 

புதுவையில் கொரோனா 2-வது அலையின் தாக்கம் கடுமையாக உள்ளது. கடந்த சில நாட்களாக நாள்தோறும் புதிதாக 800-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

அதேபோல் இறப்பும் அதிகரித்து வருகிறது. கொரோனா பரவும் வேகத்தை கண்டு மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். தொற்று பரவலை தடுக்க அரசு ஊரடங்கையும் அறிவித்துள்ளது.

இந்தநிலையில் நேற்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் 6 ஆயிரத்து 30 பேருக்கு தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 899 பேருக்கு தொற்று உறுதியானது. 453 பேர் குணமடைந்தனர்.

நேற்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவுக்கு 9 பேர் பலியாகி உள்ளனர். அதாவது காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் 93 வயது முதியவர், 45 வயது ஆண், மாகி அரசு ஆஸ்பத்திரியில் 67 வயது மூதாட்டி, புதுவை தனியார் ஆஸ்பத்திரிகளில் 70 வயது, 66 வயது முதியவர்கள், ஜிப்மரில் 82 வயது, 63 வயது முதியவர்கள், கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரியில் 50 வயது ஆண், 62 வயது மூதாட்டி ஆகியோர் பலியாகி உள்ளனர். இதனால் பலியானவர்களின் எண்ணிக்கை 737 ஆக உயர்ந்துள்ளது.

மாநிலத்தில் இதுவரை 7 லட்சத்து 58 ஆயிரத்து 547 பேருக்கு தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவர்களில் 52 ஆயிரத்து 271 பேருக்கு தொற்று உறுதியானது. அதில் தற்போது 1,354 பேர் ஆஸ்பத்திரிகளிலும், 5 ஆயிரத்து 413 பேர் வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதாவது 6 ஆயிரத்து 767 பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர். 44 ஆயிரத்து 767 பேர் குணமடைந்து உள்ளனர். புதுவையில் உயிரிழப்பு 1.41 சதவீதமாகவும், குணமடைவது 85.64 சதவீதமாகவும் உள்ளது.

நேற்று முன்தினம் சுகாதார பணியாளர்கள் 194 பேரும், முன்கள பணியாளர்கள் 93 பேரும், பொதுமக்கள் 1,205 பேரும் தடுப்பூசி போட்டுள்ளனர். இதுவரை ஒட்டுமொத்தமாக ஒரு லட்சத்து 82 ஆயிரத்து 355 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.

மேலும் செய்திகள்