2 நாட்கள் ஊரடங்கு: கிராமப்புறங்களில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

2 நாட்கள் ஊரடங்கையொட்டி கிராமப்புறங்களில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.;

Update:2021-04-25 10:54 IST
பாகூர், 

புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா வைரசின் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. தொற்று பரவலை தடுக்க முதற்கட்டமாக இரவு நேர ஊரடங்கு சில நாட்களுக்கு முன்பு அமல்படுத்தப்பட்டது. இருந்தபோதிலும் தொற்று பாதிப்பு குறைந்தபாடில்லை. இதையொட்டி வார இறுதி நாட்களான சனி, ஞாயிற்றுக்கிழமை ஆகிய 2 நாட்களுக்கு தளர்வுகளுடன் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. அதன்படி காய்கறி கடைகள், மளிகை, இறைச்சி கடைகள், மருந்து கடைகள், ஓட்டல் உள்ளிட்ட அத்தியாவசிய விற்பனையை, சமூக இடைவெளியுடன் நடத்தலாம் என அனுமதி அளிக்கப்பட்டது.

காரைக்கால் பஸ்நிலையம், திருநள்ளாறு வீதி, பாரதியார் வீதி, மாதா கோவில் வீதி, உள்ளிட்ட பிரதான வீதிகளில் மக்கள் நடமாட்டம் குறைவாகவே இருந்தது.

திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலுக்கு பக்தர்கள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. அறிவிப்பு தெரியாமல் சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். முக்கிய சந்திப்பு பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

பாகூர் பகுதியில் உள்ள முக்கிய வீதிகளில் மாட வீதிகளில் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டு இருந்தது. ஒரு சில மளிகை கடை, காய்கறி கடைகள் மட்டுமே செயல்பட்டன. இதனால் அந்த பகுதி வெறிச்சோடி காணப்பட்டது.

இதேபோல் கிருமாம்பாக்கம், தவளக்குப்பம் பகுதியில் உள்ள கடைகள் பெரும்பாலும் மூடியே இருந்தது. மேலும் பல இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கன்னியகோவில் பகுதியில் முகக்கவசம் அணியாமல் வந்தவர்களை பிடித்து, கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் அபராதம் விதித்தனர். ஊரடங்கால் கிராமப்புறங்களில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

அரியாங்குப்பம் பகுதியில் ஒரு சில கடைகள் தவிர பெரும்பாலான கடைகள் திறந்தே இருந்தன. சுற்றுலா தலமான நோணாங்குப்பம் படகுகுழாம் 2 நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் வராததால் படகு குழாம் பகுதி வெறிச்சோடி காணப்பட்டது.

அரியாங்குப்பம் புறவழிச்சாலை சந்திப்பில் பேரிகார்டுகள் வைத்து போலீசார் சோதனை நடத்தினர். பொதுமக்கள் தேவையின்றி வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும். முகக்கவசம் அணிந்து அனைவரும் வர வேண்டும் என்று ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு செய்தனர். பஸ், கார், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் வழக்கம்போல் இயக்கப்பட்டன.

மேலும் செய்திகள்