வெடிகுண்டு கார் வழக்கில் கைதான போலீஸ் இன்ஸ்பெக்டர் பணி இடைநீக்கம்

வெடிகுண்டு கார் வழக்கில் கைதான போலீஸ் இன்ஸ்பெக்டர் சுனில் மானே நேற்று பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.

Update: 2021-04-25 04:38 GMT
மும்பை, 

பிரபல தொழில் அதிபர் முகேஷ் அம்பானியின் வீட்டு அருகே வெடிப்பொருள் நிரப்பிய கார் மீட்கப்பட்ட வழக்கு மற்றும் அந்த காரின் உரிமையாளர் ஹிரன் மன்சுக் கொலை வழக்கில் மும்பை குற்றப்புலனாய்வு பிரிவு போலீஸ் உதவி இன்ஸ்பெக்டர் சச்சின் வாசே தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகளால் கடந்த மார்ச் 13-ந் தேதி கைது செய்யப்பட்டார். மேலும் அவரது கூட்டாளியான உதவி இன்ஸ்பெக்டர் ரியாஸ் காசி, இடைநீக்கம் செய்யப்பட்ட போலீஸ்காரர் விநாயக் ஷிண்டே, கிரிக்கெட் சூதாட்டக்காரர் நரேஷ் கோர் ஆகியோரையும் கைது செய்து இருந்தனர்.

இந்த நிலையில் ஹிரன் மன்சுக், காந்திவிலியை சேர்ந்த ஒரு போலீஸ் அதிகாரி தன்னை அழைத்ததாகவும், அவரை சந்திக்க செல்வதாகவும் தனது மனைவி விமாலாவிடம் கொலையான ஒரு நாளுக்கு முன் கூறிவிட்டு சென்றது தெரியவந்தது. இது தொடர்பாக நடத்திய விசாரணையில் அந்த நபர் காந்திவிலி குற்றப் புலனாய்வு பிரிவில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த சுனில் மானே என்று தெரியவந்தது. இதையடுத்து 2 நாள் விசாரணைக்கு பிறகு அவரை நேற்று முன்தினம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்தனர்.

இ்ந்த நிலையில் இன்ஸ்பெக்டர் சுனில் மானே பணி இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளார். இந்த உத்தரவை நேற்று மும்பை போலீஸ் பிறப்பித்து உள்ளது.

மேலும் செய்திகள்