கும்பமேளா, தேர்தல் பொது கூட்டங்கள் நடந்த போதே சுப்ரீம் கோர்ட்டு தலையிட்டு இருந்தால் கொரோனா பாதிப்பு மோசமாகி இருக்காது சிவசேனா கருத்து
கும்பமேளா, மேற்கு வங்காள தேர்தல் பொது கூட்டங்கள் நடந்த போதே சுப்ரீம் கோர்ட்டு தலையிட்டு இருந்தால் நாட்டில் கொரோனா பாதிப்பு இந்தளவுக்கு மோசமாகி இருக்காது என சிவசேனா கூறியுள்ளது.
மும்பை,
நாடு முழுவதும் 2-வது கொரோனா அலைவீசி வருகிறது. இதன்காரணமாக ஆக்சிஜன், ரெம்டெசிவிர் மருந்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து தாமாக முன் வந்து விசாரணை நடத்திய சுப்ரீம் கோர்ட்டு ஆக்சிஜன் வினியோகம், அத்தியாவசிய மருந்து, தடுப்பூசி தொடர்பாக தேசிய அளவிலான திட்டத்தை உருவாக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
இந்தநிலையில் சுப்ரீம் கோர்ட்டு மேற்கு வங்காளத்தில் தேர்தல் பொது கூட்டங்கள், ஹரித்துவார் கும்பமேளா நடந்த போதே கொரோனா பரவல் விவகாரத்தில் தலையிட்டு இருந்தால் பாதிப்பு இந்தளவுக்கு மோசமாகி இருக்காது என சிவசேனா கூறியுள்ளது.
இதுகுறித்து சிவசேனா கட்சியின் சாம்னா பத்திரிகையில் கூறியிருப்பதாவது:-
இந்த விவகாரத்தில் கோர்ட்டு தலையிட்டு இருப்பது நல்லது தான். எனினும் மேற்கு வங்காளத்தில் தேர்தலையொட்டி பிரதமர், உள்துறைமந்திரி மற்றும் மற்ற தலைவர்களின் பிரசார பொதுக்கூட்டங்கள் நடந்தது, ஹரித்வாரில் நடந்த கும்பமேளா விவகாரத்தில் கோர்ட்டு சரியான நேரத்தில் தலையிட்டு இருக்க வேண்டும். அப்படி நடந்து இருந்தால் மக்கள் இப்படி உயிரிழந்து இருக்க மாட்டார்கள். டெல்லியில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் பலர் உயிரிழந்து உள்ளனர். இதற்கு மத்திய அரசு காரணம் இல்லையென்றால், வேறு யார் காரணம்?.
மத்திய அரசு மேற்கு வங்காளம், தமிழ்நாடு, கேரளா, புதுச்சோி, அசாம் போன்ற மாநில தேர்தலில் கவனம் செலுத்தாமல், 2-வது கொரோனா அலையில் கவனம் செலுத்தி இருந்தால் நிலைமை இவ்வளவு மோசமாகி இருக்காது. மோடியும் அவரது சகாக்களும் இந்தியாவை சொர்க்கமாக மாற்ற விரும்பினார்கள். ஆனால் நாங்கள் மயானங்களையும், இடுகாடுகளையும் தான் பார்க்கிறோம். கூட்டமாக இறுதி சடங்குகள் நடக்கின்றன. நோயாளிகளுடன் ஆஸ்பத்திரியும் சேர்ந்து எரிகிறது. இது நரகம் இல்லையா?. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்தநிலையில் மராட்டியத்தில் கொரோனா பரவல் அதிகமாக உள்ளது குறித்து சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத்திடம் கேட்ட போது, அவர் "கொரோனாவுக்கு எதிரான போரை உத்தவ் தாக்கரே முன் நின்று நடத்துகிறார். அவர் தேர்தல் பொது கூட்டத்துக்காக எங்கும் செல்லவில்லை. அவர் போராடுகிறார். மும்பையில் இருந்தபடி வழிநடத்துகிறார். அவர் அரசியலில் ஈடுபடவில்லை " என்றார்.