அரசு ஆஸ்பத்திரியில் கொடூரம் ஆக்சிஜனை நிறுத்திய விஷமியால் 2 கொரோனா நோயாளிகள் பலி போலீசார் தீவிர விசாரணை
ஆக்சிஜன் சிலிண்டர் வால்வை யாரோ விஷமி அடைத்ததால் 2 கொரோனா நோயாளிகள் உயிரிழந்த கொடூரம் மராட்டியத்தில் நடந்து உள்ளது.
மும்பை,
மராட்டியத்தில் கொரோனா தொற்று காட்டுத்தீயாக பரவி வரும் நிலையில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக கடந்த புதன்கிழமை நாசிக் மாநகராட்சி ஆஸ்பத்திரியில் 24 கொரோனா நோயாளிகள் உயிரிழந்தனர். மேலும் ஆங்காங்கே ஆஸ்பத்திரிகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக நோயாளிகள் உயிரிழந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.
இந்த நிலையில் பீட் மாவட்ட அரசு ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் சிலிண்டர் வால்வை யாரோ விஷமி அடைத்ததால் 2 கொரோனா நோயாளிகள் உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்துக்கு வந்து உள்ளது. நேற்று முன்தினம் இரவு நோயாளிகள் உயிரிழந்ததை அடுத்து டாக்டர்கள், ஊழியர்கள் ஆக்சிஜன் சிலிண்டரை சரிபார்த்தனர். அப்போது சிலிண்டரின் வால்வு அடைக்கப்பட்டு இருந்தது. ஆனால் வால்வை அடைத்தது யார் என்று தெரியவில்லை. யாரோ விஷமி வேண்டுமென்றே வால்வை அடைத்து இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இந்த சதி செயலுக்கு உயிரிழந்தவர்களில் ஒருவர் 35 வயது வாலிபர் என்றும், மற்றொருவர் 55 வயதுடையவர் என்றும் தெரியவந்தது. இதில் 35 வயது வாலிபரின் உறவினர் கூறுகையில், ஆக்சிஜன் துண்டிக்கப்பட்டதால் எனது உறவுக்காரர் தண்ணீரில் இருந்து வெளியேற்றப்பட்ட மீன் போல துடிதுடித்து இறந்து போனார் என்று கண்ணீர் மல்க கூறினார். மேலும் சம்பவம் நடந்தபோது வார்டில் ஊழியர்கள் யாரும் இல்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம ஆசாமி யார் என்பது தொடர்பாக போலீஸ் விசாரணை நடந்து வருகிறது.
இதற்கிடையே ஆக்சிஜன் சிலிண்டர் வால்வு அடைக்கப்பட்டதில் ஒருவர் மட்டுமே உயிரிழந்தார் என்றும், மற்றொருவர் ஏற்கனவே கவலைக்கிடமான நிலையில் இருந்ததாகவும் ஆஸ்பத்திரி நிர்வாகம் தெரிவித்து உள்ளது.