பொறுப்புணர்வுடன் நடந்தால் கொரோனாவை ஜெயிக்கலாம்: ‘அனைவரும் கண்டிப்பாக தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள்' எஸ்.வி.சேகர் வேண்டுகோள்

அனைவரும் கண்டிப்பாக தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள் என்று 2-வது தவணை கொரோனா தடுப்பூசி போட்ட பின்னர் நடிகர் எஸ்.வி.சேகர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Update: 2021-04-25 02:38 GMT
சென்னை, 

தமிழகத்தில் கொரோனா பரவலின் 2-வது அலை வேகமெடுத்து வருகிறது. கொரோனா தொற்று சங்கிலியை உடைத்தெறிய பொதுமக்கள், தடுப்பூசியை பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என்று அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

இந்தநிலையில் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் நடிகர் எஸ்.வி.சேகர், அவருடைய மனைவி உமா மகேஸ்வரி, தாய் அலமேலு மற்றும் குடும்பத்தினருடன் 2-வது தவணை கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி நேற்று போட்டுக்கொண்டார்.

இதேபோல நடிகை ஜெயமாலினியும் 2-வது தவணை தடுப்பூசி போட்டுக்கொண்டார்.

அதன்பிறகு நடிகர் எஸ்.வி. சேகர், வெளியிட்ட வீடியோ பதிவில் கூறி இருப்பதாவது:-

என்னுடைய குடும்பத்தினருடன் சேர்ந்து இன்று (அதாவது நேற்று) கோவிஷீல்டு 2-வது தவைண தடுப்பூசி நான் போட்டுக்கொண்டேன். நம்முடைய தேக ஆரோக்கியத்துக்காகவும், நம்மை சுற்றி இருப்பவர்களின் நலனுக்காகவும் கோவிஷீல்டோ அல்லது கோவேக்சின் தடுப்பூசியோ நாம் போடவேண்டியது அவசியமான ஒன்று.

வீணான வதந்திகளை நம்பவேண்டாம். நான் முதல் தவணை தடுப்பூசி செலுத்தி ஒரு மாதம் ஆகிறது. பக்க விளைவுகள் எதுவும் ஏற்படவில்லை. ஊசி குத்தும்போது வலிப்பதை தவிர வேறு எதுவும் இல்லை. முக்கியமான விஷயங்களை டாக்டர்களிடம் கேட்டு தெரிந்துக்கொள்ளவேண்டும்.

தடுப்பூசி செலுத்திய பின்னர் 10 நாட்களுக்கு மது அருந்தக்கூடாது என்று சில டாக்டர்கள் சொல்கிறார்கள். 72 மணி நேரம் அசைவ உணவு சாப்பிடக்கூடாது என்றும் சொல்கிறார்கள். எந்த மருந்து சாப்பிடலாம்? எந்த மருந்து சாப்பிடக்கூடாது? என்பதை டாக்டர்களிடம் கேட்டு தெரிந்துக்கொள்ளுங்கள். சந்தேகங்களை தெளிவுப்படுத்திக்கொண்டு ஊசி போட்டுக்கொள்ளுங்கள்.

அதைவிட்டுவிட்டு, பயத்தில் தடுப்பூசி போடமாட்டேன் என்று சொல்வதில் எந்த பிரயோஜனமும் இல்லை. 130 கோடி பேர் இருக்கும் தேசத்தில், நாம் ஒவ்வொருவரும் பொறுப்புணர்வுடன் நடந்துகொண்டால், கொரோனாவை நாம் ஜெயிக்க முடியும். மறந்துவிடாதீர்கள், கண்டிப்பாக அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள். இவ்வாறு அந்த வீடியோவில் அவர் கூறியிருக்கிறார்.

மேலும் செய்திகள்