இன்று முழு ஊரடங்கு அமல்: வாக்கு எண்ணும் மையங்களில் வேட்பாளர்கள், முகவர்களுக்கு அனுமதி மாவட்ட தேர்தல் அதிகாரி கோ.பிரகாஷ் தகவல்

தமிழகத்தில் இன்று முழு ஊரடங்கு அமலில் இருக்கும் நேரத்தில் வாக்கு எண்ணும் மையங்களில் வேட்பாளர்கள், முகவர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது என மாவட்ட தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

Update: 2021-04-25 01:50 GMT
சென்னை, 

தமிழக சட்டசபை தேர்தல் கடந்த 6-ந் தேதி நடந்தது. இதையடுத்து சென்னையில் உள்ள தொகுதிகளில் பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் லயோலா கல்லூரி, அண்ணா பல்கலைக்கழகம், ராணிமேரி கல்லூரி ஆகிய 3 வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டுள்ளன.

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதுதவிர கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன. வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை அவ்வப்போது அரசியல் கட்சி வேட்பாளர்கள் மற்றும் அவர்களுடைய பிரதிநிதிகள் கண்காணித்து வருகின்றனர்.

இந்தநிலையில் தமிழகத்தில் கொரோனாவின் 2-வது அலை உருவாகி, நோய்த்தொற்றால் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனை தடுப்பதற்கு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதன் ஒரு அங்கமாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. எனினும் பால், பத்திரிகை துறை, மருத்துவம், சரக்கு போக்குவரத்து உள்பட அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் வாக்கு எண்ணும் மையங்களை பார்வையிட அரசியல் கட்சி பிரதிநிதிகள், வேட்பாளர்கள், முகவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி கோ.பிரகாஷ் வெளியிட்ட அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், சுயேச்சை வேட்பாளர்கள், முகவர்கள் வாக்கு எண்ணும் மையங்களில் நாளை (அதாவது இன்று) அனுமதிக்கப்படுவார்கள். தேர்தல் நடத்தும் அதிகாரி அல்லது மாவட்ட தேர்தல் அதிகாரி வழங்கிய அதிகாரபூர்வ அடையாள அட்டையை அவர்கள் எல்லா நேரமும் வைத்திருக்க வேண்டும்.அடையாள அட்டை வைத்திருப்பவர்கள் மட்டுமே வாக்கு எண்ணும் மையங்களுக்கு உள்ளே அனுமதிக்கப்படுவார்கள். மற்றவர்கள் கண்டிப்பாக அனுமதிக்கப்படமாட்டார்கள். இது வாக்கு எண்ணும் மையங்களில் பணியில் ஈடுபடும் அதிகாரிகளுக்கும் பொருந்தும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்