முழு நேர ஊரடங்கை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை
திருப்பூர் மாவட்டத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை முழு நேர ஊரடங்கை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் விஜயகார்த்திகேயன் எச்சரித்துள்ளார்.;
திருப்பூர்
திருப்பூர் மாவட்டத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை முழு நேர ஊரடங்கை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் விஜயகார்த்திகேயன் எச்சரித்துள்ளார்.
முழு நேர ஊரடங்கு
திருப்பூர் மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
கொரோனா வைரஸ் நோயை முற்றிலும் தவிர்த்திடும் வகையில் சமூக தனிமைப்படுத்துதலை தீவிரப்படுத்த தமிழக அரசின் உத்தரவின் பேரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த முழு ஊரடங்கின் போது அரசினால் விதிக்கப்பட்டுள்ள விதிமுறைகளை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இந்த இரவு நேர ஊரடங்கு நேற்று இரவு 10 மணி முதல் நாளை (திங்கட்கிழமை) காலை 4 மணி வரை அமலில் இருக்கும்.
முழு நேர ஊரடங்கு அமலில் உள்ள ஞாயிற்றுக்கிழமையன்று இறைச்சிக்கடைகள், மீன் மார்க்கெட், காய்கறி கடைகள், திரையரங்குகள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் செயல்பட அனுமதியில்லை. அத்தியாவசிய பணிகளான பால் வினியோகம், குடிநீர் வினியோகம், தினசரி பத்திரிகை வினியோகம், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி சேவைகள் போன்ற மருத்துவத்துறை சேர்ந்த பணிகள், விவசாயிகளின் விளைபொருட்களை எடுத்துச்செல்லும் வாகனங்கள் மற்றும் எரிபொருள் எடுத்துச்செல்லும் வாகனங்களுக்கு மட்டும் அனுமதி உண்டு.
உணவு பார்சல் சேவை
உணவு வினியோகத்தை பொறுத்தவரை காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும், நண்பகல் 12 மணி முதல் மாலை 3 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் பார்சல் சேவை அனுமதிக்கப்பட்டுள்ளது. மின்வணிகம் மூலம் உணவு வினியோகம் செய்யும் நிறுவனங்கள் மேற்கண்ட நேரங்களில் மட்டுமே செயல்பட அனுமதிக்கப்படுகிறது. முழு ஊரடங்கு தினத்தில் மின் வணிக நிறுவனங்கள் சேவைக்கு அனுமதியில்லை.
அரசு உத்தரவின்படி தடையின்றி செயல்பட வேண்டிய தொடர் செயல்முறை தொழிற்சாலைகள், மருந்து, உணவுப்பொருட்கள் மற்றும் கால்நடை தீவனங்கள் போன்ற அத்தியாவசிய பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள், ஏற்றுமதி நிறுவனங்கள் உள்ளிட்ட அரசால் அனுமதிக்கப்பட்டவை மட்டும் செயல்பட அனுமதி உண்டு. ஊடகம் மற்றும் பத்திரிகை துறையினர் தொடர்ந்து பணிபுரியலாம்.
கடும் நடவடிக்கை
முழு ஊரடங்கு காலத்தில் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் வீட்டிலேயே இருக்க வேண்டும். கிருமிநாசினி பயன்படுத்துதல், முக கவசம் அணிதல், கைகளை அடிக்கடி சோப்பு போட்டு கழுவுதல் மற்றும் சமூக இடைவெளி பின்பற்றுதல் ஆகியவை முழுமையாக கடைபிடிக்க வேண்டும். முழு ஊரடங்கில் விதிகளை மீறுவோர் மீது வழக்குப்பதிவு போன்ற கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கலெக்டர் கூறியுள்ளார்.