நாமக்கல் மாவட்டத்தில் ஒரே நாளில் டாக்டர் உள்பட 216 பேருக்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 14,379 ஆக உயர்வு
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் அரசு ஆஸ்பத்திரி பெண் டாக்டர் உள்பட 216 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. எனவே மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 14,379 ஆக அதிகரித்து உள்ளது.
நாமக்கல்,
தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பின்படி நேற்று முன்தினம் வரை நாமக்கல் மாவட்டத்தில் 14 ஆயிரத்து 158 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இதற்கிடையே பிற மாவட்டத்தில் சிகிச்சை பெற்று வந்த 5 பேரின் பெயர் நாமக்கல் மாவட்ட பட்டியலுடன் இணைக்கப்பட்டது. இதனால் நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 14 ஆயிரத்து 163 ஆக அதிகரித்தது.
இதற்கிடையே நேற்று ஒரே நாளில் அரசு ஆஸ்பத்திரி பெண் டாக்டர், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர், கோர்ட்டு ஊழியர், லேப் டெக்னீசியன் உள்பட 216 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. இதனால் நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14,379 ஆக உயர்ந்து உள்ளது.
1,420 பேருக்கு சிகிச்சை
இதற்கிடையே நேற்று நாமக்கல் மாவட்டத்தில் 113 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பினர். இதுவரை 12 ஆயிரத்து 846 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். 113 பேர் இறந்து விட்ட நிலையில், 1,420 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கொரோனாவின் 2-வது அலை வேகமாக பரவி வருவதால், பொதுமக்கள் முக கவசம் அணியாமல் வெளியே செல்லக்கூடாது எனவும், சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.