அரியலூரில் வழக்கத்தைவிட வியாபாரம் குறைவு
இன்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் நிலையில் நேற்று அரியலூரில் வழக்கத்தைவிட வியாபாரம் குறைவாக இருந்தது.
அரியலூர்:
இன்று முழு ஊரடங்கு
தமிழகத்தில் கொரோனா வைரசின் தாக்கம் மீண்டும் அதிகரித்த நிலையில் இரவு நேர ஊரடங்கு கடந்த 20-ந்தேதி முதல் அமல்படுத்தப்பட்டு நடைமுறையில் உள்ளது. இந்த ஊரடங்கு இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை கடைபிடிக்கப்படுகிறது. மேலும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது.
அதன்படி இன்று (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் இன்று டீக்கடைகள், இறைச்சி கடைகள், மீன் மார்க்கெட், காய்கறி கடைகள், சினிமா தியேட்டர்கள், வணிக வளாகங்கள் மற்றும் டாஸ்மாக் கடைகள் செயல்படாது.
இந்நிலையில் அரியலூரில் நேற்று கடைவீதிகளில் வழக்கமாக இருக்கும் கூட்டத்தை விட குறைவாகவே இருந்தது. மாதக்கடைசி மற்றும் சனிக்கிழமை ஆகிய காரணங்களால் இறைச்சி கடைகளில் ஒரு சிலரே ஆட்டு இறைச்சி, கோழி இறைச்சி மற்றும் மீன் ஆகியவற்றை வாங்கிச்சென்றனர்.
நடத்தப்படாத வாரச்சந்தை
காந்தி மார்க்கெட்டில் மொத்த வியாபாரம் நடைபெறும் கடைகளில் மட்டும் காய்கறிகள் வாங்க கூட்டம் ஓரளவு இருந்தது. சில்லறை கடைகளில் வழக்கத்தைவிட குறைவான அளவே வியாபாரம் நடந்தது.
வழக்கமாக ஞாயிற்றுக்கிழமையன்று அரியலூர் நகராட்சி அலுவலகம் அருகில் நடைபெறும் வாரச்சந்தை, முழு ஊரடங்கை முன்னிட்டு நேற்று நடத்தப்படலாம் என்று பொதுமக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் நேற்று வாரச்சந்தை நடைபெறவில்லை.
அரியலூர் பகுதியில் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஒலிப்பெருக்கி மூலம் பொதுமக்களுக்கு கொரோனா மற்றும் ஊரடங்கு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இன்று உடல்நிலை பாதிக்கப்பட்டால் மருத்துவமனைக்கு செல்வதை தவிர வேறு எதற்கும் பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என்று அறிவுரை வழங்கப்பட்டது.