பழைய இரும்பு கடை குடோன் தீப்பற்றி எரிந்தது
ஜெயங்கொண்டம் அருகே பழைய இரும்பு கடை குடோன் தீப்பற்றி எரிந்ததில் அட்டைப்பெட்டிகள், பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளிட்ட ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.
ஜெயங்கொண்டம்:
குடோன்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள மகிமைபுரம் கிராமம் சவுந்திரபாண்டி நகரை சேர்ந்தவர் சித்திரைகனி. இவர் விருத்தாசலம் சாலையில் ஜெயங்கொண்டம் நகராட்சி அலுவலகம் அருகில் பழைய பேப்பர், இரும்புக்கடை வைத்துள்ளார்.
இவர் தனது வீட்டையொட்டி உள்ள இடத்தில் பழைய இரும்பு, அட்டை, புத்தகங்களை அடுக்கி வைக்கும் குடோனாக பயன்படுத்தி வந்தார். அதன்படி தனது வீட்டிற்கு பின்புறத்தில் குறுக்கே தகர தடுப்புகள் வைத்து 2 அறைகளில் அட்டைகளையும், வீட்டு ஓரங்களில் பழைய பிளாஸ்டிக் சேர் உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருட்களையும் வைத்திருந்தார்.
தீப்பற்றி எரிந்தது
இந்நிலையில் நேற்று இரவு மர்மமான முறையில் குடோன் பகுதியில் திடீரென தீப்பற்றியதாக கூறப்படுகிறது. மளமளவென தீ பரவியது. இதில் அருகில் இருந்த கட்டிடங்கள் உள்ளிட்ட பகுதிகளில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் அட்டை பெட்டிகள், புத்தகங்கள் என சுமார் ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகின. இது பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறை ஒருங்கிணைந்த பெரம்பலூர், அரியலூர் மாவட்ட அதிகாரி அம்பிகா மற்றும் ஜெயங்கொண்டம் தீயணைப்பு நிலைய அலுவலர் மோகன்ராஜ் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள், தீயணைப்பு வாகனம் மூலம் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் 2 தீயணைப்பு வாகனங்கள் மூலம் தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். அறையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த அட்டைப்பெட்டிகள் தீயில் எரிந்து கருகியதில் புகைந்து கொண்டிருந்தது. இதனால் அப்பகுதியே புகை மண்டலம் போல் காட்சி அளித்தது.
தீயை அணைக்க போராட்டம்
இதையடுத்து சவுந்திரபாண்டி நகர் மற்றும் கீழக்குடியிருப்பு கிராம இளைஞர்கள் ஒன்றுகூடி தீயணைப்பு வீரர்களுக்கு உதவும் வகையில் ஜன்னல் கதவு சுவற்றை கடப்பாரையால் இடித்து, ஜன்னலில் கயிறுகளை கட்டி 10 பேர் கொண்ட குழுவினராக சேர்ந்து ஜன்னல்களை அகற்றினர். இதையடுத்து தீயணைப்பு வீரர்கள், ஜன்னல் அகற்றப்பட்ட பகுதி வழியாக அறைகளில் தண்ணீரை பீய்ச்சி அடித்து, நீண்ட நேர போராட்டத்திற்கு பின்னர் தீயை அணைத்தனர். அதிகாலை 5 மணிக்கு தொடங்கிய தீயணைக்கும் பணி மதியம் 2 மணி வரை தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே அருகே உள்ள வீடுகளில் இருந்த சமையல் கியாஸ் சிலிண்டர்கள் உள்ளிட்ட எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் தீயணைப்பு வீரர்கள் அறிவுரையின்பேரில் உடனடியாக அகற்றப்பட்டது. மேலும் மின்வாரியத்தினர் உடனடியாக மின் இணைப்பை துண்டித்தனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. மேலும் அக்கம், பக்கத்தில் குடியிருப்பவர்கள் தங்கள் வீட்டில் உள்ள முக்கிய ஆவணங்களை எடுத்து கையில் வைத்துக்கொண்டு, தங்களது வீட்டிற்கும் தீ பரவிவிடுமோ என்ற பீதியில் அங்குமிங்கும் உலாவியவாறு இருந்தனர்.
விசாரணை
இந்த சம்பவத்தில் மதுபோதையில் எவரேனும் சிகரெட் பிடித்து விட்டு தூக்கி எறிந்து சென்றதால் தீப்பிடித்ததா? அல்லது யாரேனும் வேண்டுமென்றே தீ வைத்தார்களா? என்பன உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் ஜெயங்கொண்டம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.