சிவன் கோவில்களில் சனிப்பிரதோஷ வழிபாடு
சிவன் கோவில்களில் சனிப்பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.
அரியலூர்:
அரியலூர் மாவட்ட பகுதியில் உள்ள சிவன் கோவில்களில் சனிப்பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. தாமரைக்குளம் அருகே குறிஞ்சான் குளக்கரையில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலில் சனிப்பிரதோஷத்தை முன்னிட்டு பூச்சொரிதல் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
தா.பழூரில் உள்ள விசாலாட்சி அம்மன் உடனுறை விஸ்வநாதர் கோவிலில் சனி பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதில் விஸ்வநாதர், விசாலாட்சி அம்மன் மற்றும் நந்திபெருமானுக்கு பல்வேறு திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சுவாமி மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி தந்தார். இதைத்தொடர்ந்து பிரதோஷ நாயகர்கள் அலங்கரிக்கப்பட்டு திருமுறைகள், சிவபுராணம் முழங்க கோவிலில் பிரதட்சனம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பிரதோச வழிபாட்டு குழுவினர் ஏற்பாடு செய்திருந்தனர். தா.பழூர் அருகே உள்ள காரைக்குறிச்சி சவுந்திரநாயகி அம்மன் உடனுறை பசுபதீஸ்வரர் கோவில், கோடாலிகருப்பூர் மீனாட்சி அம்மன் உடனுறை சுந்தரேஸ்வரர் கோவில், நாயகனைப்பிரியாள் மரகதவல்லி தாயார் உடனுறை மார்க்கசகாயேஸ்வரர் கோவில் ஆகிய கோவில்களிலும் பிரதோஷத்தை முன்னிட்டு சுவாமி, அம்பாள், நந்தி பெருமானுக்கு வாசனை திரவியங்கள் கொண்டு அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.