புராதன சின்னமாக அறிவிக்கப்பட்ட யானை சிலையை சுற்றி சுவர் அமைப்பு
புராதன சின்னமாக அறிவிக்கப்பட்ட யானை சிலையை சுற்றி சுவர் அமைக்கும் பணி நடக்கிறது.
மீன்சுருட்டி:
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டியை அடுத்த கங்கை கொண்ட சோழபுரத்தின் அருகே உள்ள சலுப்பை கிராமத்தின் ஊர் எல்லையில் காவல் தெய்வமாக துறவுமேல் அழகர் கோவில் உள்ளது. இந்த கோவிலின் முகப்பில் ராஜேந்திர சோழன் ஆட்சிக்காலத்தில் செங்கல் மற்றும் சுண்ணாம்பு சுதையால் செய்யப்பட்ட யானை சிலை உள்ளது. இந்த சிலை 41 அடி நீளம், 12 அடி அகலம் மற்றும் 80 அடி உயரம் கொண்டதாக உள்ளது. நின்றபடி உள்ள யானையின் கால்களுக்கு இடையே 3 பேர் தாளமிடும் கோலத்திலும், உள் பக்கத்தில் தும்பிக்கையை தாங்கி ஒருவரும், அவருடைய கால் யானையின் காலடியில் சிக்கி இருப்பது போன்றும், இந்த சிலை காட்சியளிக்கிறது.
இந்த சிலையானது ஆசியாவிலேயே மிகப்பெரிய யானை சுதை சிலை என்பது சிறப்பு அம்சமாகும். மேலும் இக்கோவிலை சுற்றி பல்வேறு சிற்பங்கள் தொழில்நுட்பத்துடனும், கலைநயத்துடனும் காட்சியளிக்கிறது. இக்கோவிலுக்கு தமிழகம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து பக்தர்கள் அதிக அளவில் வந்து ரசித்து செல்கின்றனர். மேலும் இந்த யானை சுதை சிலையை தமிழக தொல்லியல் துறை புராதன சின்னமாக அறிவித்து பாதுகாத்து வருகின்றனர். இதையொட்டி தற்போது இந்த சிலையை பாதுகாக்கும் வகையில், சிலையை சுற்றி சுற்றுச்சுவர் அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றது.