இன்று முழு ஊரடங்கு: நெல்லையில் பாதுகாப்பு பணியில் 2,800 போலீசார்

இன்று (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கை முன்னிட்டு, நெல்லை மாவட்டத்தில் 2,800 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

Update: 2021-04-24 21:01 GMT
நெல்லை:
தமிழகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இதனை கண்காணிப்பதற்காக போலீசார் பல்வேறு இடங்களிலும் சோதனைச்சாவடி அமைத்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நேற்று இரவு 10 மணியில் இருந்தே பாதுகாப்பு பணியை தொடங்கிய போலீசார், அத்தியாவசிய பணிகளுக்கு மாறாக வெளியில் சுற்றி திரிந்தவர்களை எச்சரித்து அனுப்பினர்.

முழு ஊரங்கை முன்னிட்டு, நெல்லை மாநகர பகுதியில் 1,100 போலீசாரும், புறநகர் மாவட்டத்தில் 1,700 போலீசாரும் என மாவட்டம் முழுவதும் மொத்தம் 2,800 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். நெல்லை மாநகரில் போலீஸ் கமிஷனர் அன்பு, துணை கமிஷனர்கள் சீனிவாசன், மகேஷ்குமார் ஆகியோரது மேற்பார்வையிலும், புறநகர் மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் மேற்பார்வையிலும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டுள்ளனர். இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:-

முழு ஊரடங்கை முன்னிட்டு, நெல்லை மாநகரில் பழைய பேட்டை, டக்கரம்மாள்புரம், கே.டி.சி. நகர், தாழையூத்து போன்ற இடங்களில் போலீசார் சோதனைச்சாவடிகள் அமைத்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.  இதேபோன்று மாவட்டத்தில் கங்கைகொண்டான், காவல்கிணறு, உவரி, திசையன்விளை, வன்னிக்கோனேந்தல், கிருஷ்ணாபுரம் உள்ளிட்ட இடங்களிலும் போலீசார் சோதனைச்சாவடிகள் அமைத்து கண்காணித்து வருகின்றனர். அத்தியாவசிய தேவைகளுக்கு மாறாக வெளியில் சுற்றி திரிகிறவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். இந்த வாகனங்களை குறிப்பிட்ட நாட்களுக்கு மீட்க முடியாது. மருந்து, பால் போன்ற அத்தியாவசிய கடைகளை தவிர மற்ற அனைத்து கடைகளும் மூடப்பட்டு இருக்க வேண்டும். அத்தியாவசிய தேவைகளுக்கு மாறாக வெளியில் சுற்றி திரிந்தால் அபராதம் விதித்து கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கொடிய கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அரசின் நடவடிக்கைக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


மேலும் செய்திகள்