வரத்து அதிகரிப்பால் நெல்லையில் பல்லாரி விலை குறைந்தது
வரத்து அதிகரிப்பால் நெல்லையில் பல்லாரி விலை குறைந்து காணப்படுகிறது.;
நெல்லை:
நெல்லை டவுன் நயினார்குளம் மொத்த மார்க்கெட்டுக்கு நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மட்டுமல்லாமல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் வடமாநிலங்களில் இருந்தும் காய்கறிகள் கொண்டு வரப்படுகின்றன. இவை ஏலம் முறையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த காய்கறிகளை சில்லறை வியாபாரிகள் வாங்கிச் சென்று பொதுமக்களுக்கு விற்பனை செய்கின்றனர்.
கொரோனா பரவல் காரணமாக இரவு நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் லாரிகளில் சரக்குகள் கொண்டு வருவதில் சிரமம் ஏற்பட்டு உள்ளது. பகல் நேரத்தில் மட்டுமே லாரிகள் இயக்கப்பட்டு காய்கறிகள் கொண்டு வரப்படுகின்றன.
இதையொட்டி மராட்டியத்தில் இருந்து பல்லாரிகள் மொத்தமாக நெல்லைக்கு கொண்டுவரப்பட்டன. வரத்து அதிகரித்து உள்ளதால் பல்லாரி விலை குறைந்துள்ளது. நேற்று மொத்த வியாபாரிகளுக்கு ரூ.13-க்கு ஒரு கிலோ பல்லாரி விற்பனை செய்யப்பட்டது. பொதுமக்களுக்கு ரூ.18 முதல் ரூ.25 வரை தரம் வாரியாக பல்லாரி விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் சின்ன வெங்காயம் விலையும் கணிசமாக குறைந்துள்ளது.