ஈரோட்டில் புதிதாக தொற்று பாதித்த பகுதிகளில் பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை
ஈரோட்டில் புதிதாக தொற்று பாதித்த பகுதிகளில் பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.
ஈரோட்டில் புதிதாக தொற்று பாதித்த பகுதிகளில் பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.
கொரோனா பரிசோதனை
ஈரோடு மாநகராட்சி பகுதியில் கொரோனா தொற்று பரவுவதை தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி புதிதாக கொரோனா பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு சிறப்பு முகாமிட்டு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
இந்த நிலையில் ஈரோடு சிதம்பரம் காலனியில் ஒரே வீட்டில் வசிக்கும் 4 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. அங்கு மேலும் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அந்த பகுதியில் சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும், அங்கு சிறப்பு முகாமிட்டு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்களிடம் இருந்து கொரோனா பரிசோதனைக்கு தேவையான சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டன.
மருத்துவ முகாம்
இதேபோல் ஈரோடு சம்பத்நகரில் ஒரு வயது குழந்தைக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. அந்த குழந்தையின் பெற்றோர் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் பரிசோதனைக்காக சளி மாதிரி எடுக்கப்பட்டன. மேலும், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மாநகராட்சிக்கு உள்பட்ட 10 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நேற்று தொடங்கப்பட்டன. ஈரோடு நேதாஜிரோடு, சூரம்பட்டி, சிதம்பரம்காலனி, சம்பத்நகர் உள்ளிட்ட பகுதிகளில் நடந்த முகாமை மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் ஆய்வு செய்தார்.
அப்போது அவர் கூறுகையில், “புதிதாக கொரோனா நோயாளி கண்டறியப்பட்ட பகுதியில் இருந்து குறிப்பிட்ட சுற்றளவில் வசிக்கும் மக்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. காய்ச்சல், சளி பாதிப்பு இருந்தால் மருத்துவ முகாம் நடத்துவது, கொரோனா தடுப்பூசி போடாமல் இருந்தால் அவர்களை அருகில் உள்ள தடுப்பூசி மையங்களுக்கு அழைத்து செல்வது உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்தும் வகையில் சிறப்பு மருத்துவ முகாம்கள் தொடங்கப்பட்டு உள்ளன. மாநகராட்சியில் பல்வேறு பகுதிகளில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது”, என்றார்.