திருச்சி விமான நிலையத்தில் 7¼ கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் 8 பயணிகளிடம் விசாரணை
திருச்சி விமான நிலையத்தில் 7¼ கிலோ கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்த மத்திய வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள், அதை கடத்தி வந்த 8 பயணிகளிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.;
செம்பட்டு,
திருச்சி விமான நிலையத்தில் 7¼ கிலோ கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்த மத்திய வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள், அதை கடத்தி வந்த 8 பயணிகளிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தங்கம் கடத்தல்
திருச்சி விமான நிலையத்தில் வெளிநாடுகளிலிருந்து வந்தே பாரத் திட்டத்தின் கீழ் சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த விமானங்களில் வரும் சிலர் அடிக்கடி தங்கத்தை கடத்தி வருவது வாடிக்கையாக உள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன் துபாயில் இருந்து திருச்சிக்கு வந்த வாலிபர் ஒருவர் 1 கிலோ தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகளிடம் சிக்காமல் வெளியே கொண்டுவந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. அதற்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் இருந்தார்களா? என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அதிகாரிகள் சோதனை
இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை 6.30 மணிக்கு சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் சிலர் தங்கம் கடத்தி வருவதாக திருச்சி மத்திய வருவாய் நுண்ணறிவுப்பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அந்த விமானத்தில் வந்தவர்களையும், அவர்களின் உடைமைகளையும் அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, முனியசாமி, செல்வபாண்டியன், சதீஸ்குமார், கணேசன், கருப்புஉடையார், கார்த்திக், முரளிகுமார், பாலாஜி ஆகிய 8 பேர் தங்கள் இடுப்பிலும், கைப்பைகளிலும் தங்கத்தை சங்கிலி வடிவில் மறைத்து கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் செல்வபாண்டியனும், கணேசனும் தலா 900 கிராம் தங்க சங்கிலியை வெள்ளி முலாம் பூசி எடுத்து வந்திருந்தனர். மற்றவர்கள் தங்க சங்கிலியாக கொண்டு வந்திருந்தனர்.
7¼ கிலோ தங்கம் பறிமுதல்
இவர்கள் 8 பேரிடம் இருந்தும் மொத்தம் 7 கிலோ 391 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதுடன், 8 பேரிடமும் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மொத்த மதிப்பு ரூ.3 கோடியே 58¾ லட்சம் ஆகும்.
திருச்சி விமான நிலையத்தில் தொடர்ச்சியாக தங்கம் கடத்திவரும் சம்பவம் நடந்து வரும் நிலையில், சுங்கத்துறையினர் ஒத்துழைப்பு இன்றி தங்கம் எப்படி விமான நிலையத்துக்கு வெளியே வருகிறது? என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.