உளுந்தூர்பேட்டையில் பரபரப்பு ஓய்வுபெற்ற அரசு ஊழியர் வீட்டில் ரூ.15 லட்சம் நகை, பணம் கொள்ளை

உளுந்தூர்பேட்டையில் நள்ளிரவில் ஓய்வுபெற்ற அரசு ஊழியர் வீட்டில் புகுந்து ரூ.15 லட்சம் மதிப்புள்ள நகை, பணத்தை கொள்ளையடித்துச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.;

Update: 2021-04-24 18:17 GMT
விழுப்புரம்

உளுந்தூர்பேட்டையில் நள்ளிரவில் ஓய்வுபெற்ற அரசு ஊழியர் வீட்டில் புகுந்து ரூ.15 லட்சம் மதிப்புள்ள நகை, பணத்தை கொள்ளையடித்துச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

ஓய்வுபெற்ற அரசு ஊழியர்

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பிரகாசம்நகர் பகுதியை சேர்ந்தவர் காசிநாதன்(வயது 65). இவர் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் கண்காணிப்பாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். 
நேற்று முன்தினம் இரவு காசிநாதன் மற்றும் அவரது மனைவி அன்னலட்சுமி இருவரும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது நள்ளிரவில் வீட்டின் பின்பக்க கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் பீரோவில் இருந்த 28 பவுன் நகைகள், ரூ.2 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்தனர்.

9 பவுன் சங்கிலி பறிப்பு

பின்னர் தூங்கிக்கொண்டிருந்த அன்னலட்சுமியின் கழுத்தில் கிடந்த 9 பவுன் சங்கிலியையும் பறித்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.
மறுநாள் காலையில் படுக்கையில் இருந்து எழுந்து பார்த்தபோது அன்னலட்சுமி தனது கழுத்தில் கிடந்த 9 பவுன் சங்கிலியை காணாமல் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் கணவன், மனைவி இருவரும் படுக்கை அறையை விட்டு வெளியே வந்தபோது வீட்டின் பின்பக்க கதவுகள் திறந்து கிடந்ததை பார்த்தனர்.
உடனே வீட்டின் முக்கிய அறைக்குள் சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த துணிமணிகள் ஆங்காங்கே சிதறி கிடந்தது. மேலும் பீரோவில் இருந்த 28 பவுன் நகைகள், ரூ.2 லட்சம் ரொக்கம் ஆகியவை கொள்ளை போனது தெரிந்து அதிர்ச்சி அடைந்தனர். கொள்ளை போன நகை-பணத்தின் மதிப்பு ரூ.15 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.

பின்னர் இது குறித்து போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில்  உளுந்தூர்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையில் போலீசார் விரைந்து வந்து கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டு அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் பீரோ, கதவுகளில் இருந்த ரேகைகளை பதிவு செய்து தடயங்களையும் சேகரித்தனா். 

வலைவீச்சு

இது குறித்து காசிநாதன் கொடுத்த புகாரின் பேரில் உளுந்தூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.
இதற்கிடையே அன்னலட்சுமியின் கழுத்தில் கிடந்த 9 பவுன் சங்கிலியை மர்மநபர்கள் பறித்தபோது அவர் கண்விழிக்கவில்லையா? சத்தம் போடவில்லையா? என்ற கேள்வி சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே தம்பதியர் மீது மர்மநபர்கள் மயக்க மருந்து தெளித்து தங்க சங்கிலியை பறித்து இந்த கொள்ளையை அரங்கேற்றினார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்தும் பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

பரபரப்பு

உளுந்தூர்பேட்டையில் பொதுமக்கள் அதிகம் வசிக்கக்கூடிய பகுதியில் நடைபெற்ற இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

மேலும் செய்திகள்