பாட்டாளி மக்கள் கட்சி ஆலோசனை கூட்டம்

பாட்டாளி மக்கள் கட்சி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

Update: 2021-04-24 17:52 GMT
கரூர்
கரூர் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி அலுவலகத்தில் நேற்று கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மாநில துணை பொதுச்செயலாளர் பி.எம்.கே.பாஸ்கரன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சதீஷ்குமார், மாவட்ட துணை தலைவர் ராஜேஷ்கண்ணா, கிழக்கு மாவட்ட தலைவர் மணி, கிழக்கு மாவட்ட அமைப்பு செயலாளர் முருகன் உள்பட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பின்னர் மாநில துணை பொதுச்செயலாளர் பி.எம்.கே.பாஸ்கரன் நிருபர்களிடம் கூறுகையில், கட்சியின் நிறுவனத்தலைவர் மருத்துவர் அய்யா ராமதாஸ் தொடர்ந்து தமிழகத்தின் சீரான வளர்ச்சிக்கும், அனைத்து மக்களுக்கும் அரசின் அனைத்து திட்டங்களும் விரைவாக செல்வதற்கும், தமிழகத்தை மூன்றாக பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வருகிறார். சென்னை தற்போது வளர்ந்த நகரமாக இருப்பதால், அதே போன்ற அனைத்து வசதிகளும் மக்கள் வாழுகின்ற பகுதிகள் கிடைக்க வேண்டும். 
அதற்கு மாநிலத்தை மூன்றாக பிரித்தல் வேண்டும். மதுரையை தலைமையிடமாகக் கொண்டு ஒரு மாநிலத்தையும், கோவை அல்லது ஈரோடு மாவட்டத்தை தலைமையிடமாக கொண்டு மற்றொரு மாநிலம் எனவும் 3 ஆக பிரிக்கும் போது, அந்தந்த பகுதியில் அரசு தலைமை செயலகங்கள், நீதிமன்றங்கள் உள்ளிட்ட அமைப்புகள் அங்கே அமையப்பெறும். இதற்காக வரும் மே மாதம் முதல் வாரத்தில் பொதுமக்களிடம் ஏன் தமிழகத்தை மூன்றாக பிரிக்க வேண்டும்? அதன் சாதக பாதகங்கள் என்ன? என்பது குறித்த துண்டறிக்கையை தயார் செய்து பொதுமக்களிடம் வழங்க திட்டமிட்டுள்ளோம் என்றார்.

மேலும் செய்திகள்