பொதுமக்களுக்கு மருத்துவம் பார்த்த போலி டாக்டர் மீது வழக்குப்பதிவு போலீசார் வலைவீச்சு

குளித்தலை அருகே உரிய கல்வித்தகுதி இல்லாமல் பொதுமக்களுக்கு மருத்துவம் பார்த்த போலி டாக்டர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.;

Update: 2021-04-24 17:51 GMT
குளித்தலை
போலி டாக்டர்
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள குப்பாச்சிப்பட்டி பகுதியில் எந்த ஒரு கல்வித் தகுதியும் இல்லாமல் ஒருவர் ஆங்கில மருத்துவம் பார்ப்பதாக, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறை இணை இயக்குனர் அலுவலகத்தில் இருந்து கிருஷ்ணராயபுரம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலர் அருண்பிரசாத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதன்படி அருண் பிரசாத், கரூர் சரக மருந்துகள் ஆய்வாளர் லட்சுமணதாஸ் மற்றும் குளித்தலை போலீசார் நேற்று முன்தினம் குப்பாச்சிப்பட்டி பகுதிக்கு சென்றனர். 
அப்பகுதியில் உள்ள ராஜா என்கிற சரவணசேகரன் (வயது 54) என்பவரது வீட்டில் சோதனை செய்துள்ளனர். அப்போது அவரது வீட்டில் உள்ள ஒரு அறையில் ஆங்கில மருந்துகள் இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் அவர் ஆங்கில மருந்துகளை கொண்டு பொதுமக்களுக்கு போலியாக மருத்துவம் பார்த்தது தெரியவந்துள்ளது. 
போலீசார் வழக்குப்பதிவு
பின்னர் அவர் வீட்டில் இருந்த ஆங்கில மருந்து பொருட்கள், ஊசிகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் போலி டாக்டரான சரவணசேகரன் தப்பி சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து தலைமை மருத்துவ அலுவலர் அருண்பிரசாத் குளித்தலை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலி டாக்டரான ராஜா என்ற சரவணசேகரன் மீது குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள அவரை தேடிவருகின்றனர்.

மேலும் செய்திகள்