மதுரையில் கொரோனாவுக்கு 5 பேர் உயிரிழப்பு

மதுரையில் நேற்று 596 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. 2 மூதாட்டிகள் உள்பட 5 பேர் உயிரிழந்தனர்.

Update: 2021-04-24 16:59 GMT
மதுரை,ஏப்
மதுரையில் நேற்று 596 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. 2 மூதாட்டிகள் உள்பட 5 பேர் உயிரிழந்தனர்.
உயர்வு
தமிழகத்தில் கொரோனாவின் 2-வது அலை தீவிரமாக உள்ளது. மதுரையை பொறுத்தமட்டிலும் கொரோனா பாதிப்பு கடந்த 20 தினங்களாக உயர்ந்து வருகிறது. அதில் புதிய உச்சமாக நேற்று ஒரே நாளில் 596 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. 6 ஆயிரத்து 300 பேருக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. நேற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 420 பேர் நகர் பகுதியை சேர்ந்தவர்கள். 
இதுவரை மதுரையில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 27 ஆயிரத்து 332 ஆக உயர்ந்துள்ளது. இதுபோல், நேற்று 236 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இவர்களில் 180 பேர் நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள். இதன் மூலம், இதுவரை 23 ஆயித்து 416 பேர் குணம் அடைந்து வீட்டிற்கு சென்றிருக்கிறார்கள். நேற்றைய நிலவரப்படி சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 425 ஆக உயர்ந்துள்ளது.
அவர்களில் 980 பேர் அரசு ஆஸ்பத்திரிகளிலும், 285 பேர் கண்காணிப்பு மையங்களிலும், 1,200 பேர் வீட்டு தனிமைப்படுத்துதலிலும், மீதமுள்ளவர்கள் தனியார் ஆஸ்பத்திரிகளிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுபோல், வெளிமாவட்டத்தை சேர்ந்த 310 பேரும் மதுரையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
5 பேர் பலி
இதனிடையே மதுரை தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வந்த 63, 78 வயது மூதாட்டிகள் மற்றும் 69, 64 வயது முதியவர்கள் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தனர். இதுபோல், அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த 84 வயது முதியவரும் நேற்று உயிரிழந்தார். இதன் மூலம் மதுரையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 491 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று உயிரிழந்தவர்களுக்கு கொரோனா பாதிப்புடன், வேறு சில நோய் பாதிப்பும் இருந்ததாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். மதுரையில் பாதிப்பு அதிகரித்து வருவதால் கொரோனா பரிசோதனையும் அதிக அளவில் செய்யப்படுகிறது. நேற்றைய நிலவரப்படி 9 லட்சத்து 33 ஆயிரம் பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.  
இதுகுறித்து டாக்டர்கள் கூறுகையில், “கொரோனா தடுப்பு விதிமுறைகளை சரிவர கடைபிடித்தால் மட்டுமே கொரோனா பாதிப்பு குறையும். இல்லாவிட்டால் வரும் நாட்களிலும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும். வெளியில் செல்லும் போது கண்டிப்பாக முககவசம் அணிந்தபடி செல்ல வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்” என்றனர்.

மேலும் செய்திகள்